/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேவலை கவ்விய சிறுத்தை கோவை அருகே பரபரப்பு
/
சேவலை கவ்விய சிறுத்தை கோவை அருகே பரபரப்பு
ADDED : மே 30, 2024 08:33 PM

பெ.நா.பாளையம்:கோவை மாவட்டம், தடாகம் ரோடு, சோமையனுாரில் வசிப்பவர் சக்திவேல். இவருக்கு சொந்தமான வீட்டில் சேவல் மற்றும் சில கோழிகளை வளர்த்து வந்தார். நேற்று காலை வீட்டிலிருந்த கோழிகள் தொடர்ந்து கூவிக்கொண்டே இருந்தன. சந்தேகம் அடைந்த சக்திவேல், வீட்டு வளாகத்தில் இருந்த கோழிகளை கவனித்தபோது, அதிலிருந்த சேவல் ஒன்றை காணவில்லை.
உடனடியாக தன் வீட்டில் பொருத்தியிருந்த, 'சிசிடிவி' கேமராவை பார்த்தபோது, நேற்று அதிகாலை, 5:50 மணிக்கு வீட்டு வளாகத்துக்குள் சிறுத்தை ஒன்று நுழைவதும், அது சுவர் மீது இருந்த சேவலை பிடிக்க முயற்சி செய்வதும், பின் அதை பிடித்துக் கொண்டு வெளியேறும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.
இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,'இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. கடந்த ஆண்டு காளையனுாரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதியில், 'கேமரா டிராப்' வைக்கப்பட்டது. ஆனால், அதில் சிறுத்தையின் உருவம் பதிவாகவில்லை.
'இந்நிலையில், இப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' யில் சிறுத்தையின் உருவம் பதிவாகி இருப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுத்தையை கண்டறிந்து, அதை பிடித்து, அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.