ADDED : ஜூலை 31, 2026 04:30 PM
தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க... கிணத்துக்கடவில் 7 மாதங்களில் 54 விபத்துகள்
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி –- கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 7 மாதங்களில் 44 விபத்துகள் நடந்து, 14 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளை தடுக்க துறை அதிகாரிகள், போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டும். பொள்ளாச்சி –- கோவை வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், நேரத்திற்கு செல்லவும், ரோடு விரிவாக்கப்பணிகள் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டி கடந்த, 2018ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
ரோட்டில் ஒரு சில பகுதியில், வாகனங்கள் ஒன் வே திசையில் பயணிப்பது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிராமப்புற ரோடுக்கு இணைப்பு இல்லாதது, யூ டர்ன் பகுதியில் டிவைடர்கள் இல்லாதது, ரோட்டோரம் கன ரக வாகனங்கள் பார்க்கிங் செய்தல், நகரின் முக்கிய பகுதியில், இரவு நேரத்தில் மின்விளக்கு ஒளிராமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விபத்துகள் நடக்கிறது.
அதற்கேற்றார் போல், வாகன ஓட்டுநர்களும் அதிவேகத்தில் செல்வது, பைக் ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணியாமல் தாறுமாறாக பயணிப்பது, சிக்னலை கவனிக்காமல் செல்வது, மொபைல் போன் பேசியபடி பயணிப்பது உள்ளிட்ட காரணங்களாலும் விபத்து நடக்கிறது. இதனால் இந்த ரோட்டில் ஆண்டு தோறும், நுாற்றுக்கும் மேற்பட்ட விபத்துகள் நடக்கிறது.
விபத்துகள் அதிகரிப்பு இதில், இந்த ஆண்டு (2026) ஜனவரி முதல் ஜூலை வரை கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த, 54 விபத்துக்கள், 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இதில், 90 சதவீத விபத்து பொள்ளாச்சி –- கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.
விபத்துகளை தவிர்க்க, போலீசார் மற்றும் தனியார் அமைப்பு மற்றும் பள்ளி, கல்லுாரிகள் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு செய்வதுடன், அவ்வப்போது பேரணியும் நடத்தப்படுகிறது.
ஆனாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலை நடக்கும் விபத்துகளை தவிர்க்க, தக்க நடவடிக்கை எடுத்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கூறியதாவது: கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒன்றிய அலுவலக வளாகம் மற்றும் அண்ணாநகர் செல்ல, 100 மீட்டர் தொலைவு தான் உள்ளது. ஆனால் இதற்கு முறையாக செல்ல வேண்டுமென்றால், 4 கிலோ தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.
இதேபோன்று தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கிராமப்புறங்களுக்கு செல்லும் இணைப்பு சாலைக்கு, முறையாக வசதிகள் இல்லை. இதற்கு மாறாக யூ டர்ன் சென்று திரும்பி வரும் சூழ்நிலை உள்ளது.
இதன் காரணத்தால் வாகன ஓட்டுநர்கள் பலர், ஒன் வே திசையில் பயணிப்பதால் அதிக அளவில் வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் முக்கிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செல்ல வழித்தடம் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.
