/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்டர்மீடியனை அலங்கோலப்படுத்தும் போஸ்டர்
/
சென்டர்மீடியனை அலங்கோலப்படுத்தும் போஸ்டர்
ADDED : ஆக 27, 2024 02:12 AM

பொள்ளாச்சி;சாலையின் நடுவே சென்டர் மீடியன்களில் போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது அபராதம் விதித்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
பொள்ளாச்சி நகரில், அறிவிப்பு பலகைகள், பேரிகார்டுகள், பள்ளி வளாகம், அரசு அலுவலக சுற்றுச்சுவர்கள் உள்ளிட்ட பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்படுவது வழக்கமாக உள்ளது.
குறிப்பாக, திருமணம், காது குத்து, சினிமா, சுப மற்றும் துக்க நிகழ்வுகள், அரசியல் கட்சிகளின் இத்தகைய போஸ்டர்கள் நகரின் அழகை பாதிப்படையச்செய்கிறது.
அவ்வகையில், ரோட்டின் சென்டர் மீடியன்களில், இரு பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டுவதை சிலர் வழக்கமாகக்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக, அவ்வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், போஸ்டர்களை பார்த்த படி, கவன சிதறல் ஏற்பட்டு விபத்தில் சிக்குகின்றனர். அரசுக்கு சொந்தமான இடங்களில் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம், போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர, ஆங்காங்கே அரசு சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை உடனடியாக அகற்றி, அதற்கேற்ப வர்ணம் பூசவும், துறை ரீதியான அதிகாரிகளின் கண்காணிப்பை முடுக்கி விடவும் கோரிக்கை எழுந்துள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
சாலையின் நடுவே சென்டர் மீடியன்களில் போஸ்டர்கள் ஒட்டுவது வாகன ஓட்டுநர்களின் கவனத்தை திசை திருப்பும் செயலாக உள்ளது. இதேபோல, விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற வேண்டிய இடத்தில், சுய விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவது தவறாகும்.
போஸ்டர்கள் ஒட்டும் நபர்களுக்கு மீது அபராதம் விதிக்கவும், குற்றவியல் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

