/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீர்மானம் நிறைவேறியும் விரிவடையாத சாலை
/
தீர்மானம் நிறைவேறியும் விரிவடையாத சாலை
ADDED : ஆக 10, 2024 03:01 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் தீர்மானம் நிறைவேற்றி இரண்டு ஆண்டுகள் ஆகியும், சாலை விரிவாக்கம் செய்யவில்லை.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இதில் பத்தாவது வார்டில், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கும் தனியார் துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
காலை, மாலை இரண்டு நேரமும் பள்ளி குழந்தைகள், பெற்றோர், பாக்குக்கார வீதி வழியாக, பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த சாலை மிகவும் குறுகலாகவும், உயரமாகவும் இருப்பதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட, ஓரமாக ஒதுங்கும் போது, சாக்கடையில் விழும் நிலை ஏற்படுகிறது. எனவே சாலையின் இரு பக்கம் விரிவாக்கம் செய்ய வேண்டுமென, இந்த வார்டு கவுன்சிலர், நகர் மன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இது குறித்து கவுன்சிலர் தனசேகரன் கூறியதாவது: இரண்டு ஆண்டுக்கு முன், பாக்குக்கார வீதியில் தார் சாலை போடும்போது, இரு பக்கம் உள்ள சாக்கடையை உயர்த்தும்படி, நகர மன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். இதை அடுத்து தீர்மானம் நிறைவேற்றி, மூன்று லட்சம் ரூபாயில் பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் பணிகள் செய்யாமல், நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும், கீழே விழுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கவுன்சிலர் கூறினார்.
இதுகுறித்து பொதுமக்கள், தமிழக உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருக்கும் மனு அனுப்பி உள்ளனர்.

