/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரவுண்டானா அமைத்து சோதனை ஓட்டம் வாகன நிறுத்தப்பகுதியை இடம்மாற்றணும்
/
ரவுண்டானா அமைத்து சோதனை ஓட்டம் வாகன நிறுத்தப்பகுதியை இடம்மாற்றணும்
ரவுண்டானா அமைத்து சோதனை ஓட்டம் வாகன நிறுத்தப்பகுதியை இடம்மாற்றணும்
ரவுண்டானா அமைத்து சோதனை ஓட்டம் வாகன நிறுத்தப்பகுதியை இடம்மாற்றணும்
ADDED : செப் 03, 2024 02:09 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், ஹாலோ பிளாக் கற்கள் வைத்து, ரவுண்டானா அமைத்து, சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பகுதியை இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், மார்க்கெட் ரோடு வழியாக தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கேரளா மற்றும் ஆனைமலை சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு செல்கின்றன. மார்க்கெட் ரோடு பகுதிகளில் அதிகளவு வணிக வளாகங்கள், குடோன்கள் உள்ளதால், சரக்கு லோடு ஏற்றி வரும் லாரிகளும் அதிகமாக வந்து செல்கின்றன.
இந்நிலையில், திருவள்ளுவர் திடலில் ரவுண்டானா அமைக்கவும், மார்க்கெட்டு ரோடு சந்திப்பு விரிவாக்கம் செய்யவும் அரசு, சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, திருவள்ளுவர் திடலில், ரவுண்டானா அமைத்தல், ரோட்டின் இருபுறமும், ஒன்பது மீட்டருக்கு ரோடு அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில், கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திருவள்ளுவர் திடலில் தற்காலிகமாக ஹாலோ பிளாக் கற்கள் அடுக்கி வைத்து ரவுண்டானா அமைத்து, சோதனை ஓட்டம் நடத்துகின்றனர். ரவுண்டானாவில் வாகனங்கள் செல்லும் போது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறதா என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு செய்கின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி கோட்டத்தில், திருவள்ளுவர் திடல் அருகே ரவுண்டானா அமைக்கப்படுகிறது. மார்க்கெட் ரோட்டில், 'யூ டர்ன்' அமைக்கப்படுகிறது.
தற்போது, கான்கிரீட் கொண்டு ரவுண்டானா அமைப்பதற்கு முன் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இதில், ஏதாவது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறதா என கண்காணிப்பு செய்யப்படுகிறது. அதன்பின், ரவுண்டானா முழு அளவில் அமைக்கப்படும்,' என்றனர்.
இதையும் கவனியுங்க!
திருவள்ளுவர் திடலில், ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பகுதியும், ஆட்டோ ஸ்டாண்டும் உள்ளன. ரோடு இருபுறமாக பிரிக்கப்பட்ட நிலையில், வாகனங்கள் ரவுண்டானா அருகே வரும் போது, சரக்கு வாகனங்கள் நிறுத்தத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, போக்குவரத்து போலீசார், நகராட்சி நிர்வாகத்தினர், வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்து, சரக்கு வாகனங்கள் நிறுத்தம், ஆட்டோ ஸ்டாண்ட் இடமாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போன்று, ராஜாமில் ரோடு திரும்பும் பகுதியில் ரவுண்டானா அருகேயும், அதன் எதிரே ஆனைமலைக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் பஸ் ஸ்டாப்புகள் உள்ளன. ரவுண்டானா அருகே பஸ் நிறுத்தம் செய்து பயணியரை ஏற்றி, இறக்கினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். அதற்கு மாற்றாக, 100 மீட்டர் தள்ளி பஸ்களை நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
விரைவில் ரவுண்டானா பணிகள் முழுமையடைய உள்ள நிலையில், அதற்கு முன் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, ரோடு விரிவாக்கம், ரவுண்டானா அமைத்தல் திட்டம் முழு பலன் தரும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.