/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனை நெரிசலுக்கு விரைவில் தீர்வு! மனுநீதி பார்வை பட்டதால் கிடைக்கிறது நீதி
/
அரசு மருத்துவமனை நெரிசலுக்கு விரைவில் தீர்வு! மனுநீதி பார்வை பட்டதால் கிடைக்கிறது நீதி
அரசு மருத்துவமனை நெரிசலுக்கு விரைவில் தீர்வு! மனுநீதி பார்வை பட்டதால் கிடைக்கிறது நீதி
அரசு மருத்துவமனை நெரிசலுக்கு விரைவில் தீர்வு! மனுநீதி பார்வை பட்டதால் கிடைக்கிறது நீதி
ADDED : ஆக 28, 2024 11:37 PM

கோவை: 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, அரசு மருத்துவமனை முன் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் நோயாளிகளை காண வருபவர்களின் வாகனங்களை, உள்ளே அனுமதிக்க, மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனால், அனைவரும் மருத்துவமனையின் முன், இருசக்கர வாகனங்களை அவசரத்தில் தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். சிலர் மருத்துவமனைக்கு எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி செல்கின்றனர்.
ஏற்கனவே குறுகலாக காணப்படும், அரசு மருத்துவமனை சாலை, இதனால் குறுகி விடுகிறது.
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உயிரை காப்பாற்ற அலறியபடி வரும் ஆம்புலன்சுகள் கூட, மருத்துவமனைக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது.
'தினமலர்' நாளிதழில் செய்தி
அடுத்தடுத்து ரயில்வே ஸ்டேஷன், மருத்துவமனை, பள்ளிகள், மருத்துவமனை முன் பஸ் நிறுத்தம் ஆகியவை இருப்பதால், 2 கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கண்டு, பாராட்டு பெற்று வரும் நெடுஞ்சாலைத்துறையும் போக்குவரத்து போலீசும், முக்கியமான இந்த இடம் குறித்து கண்டுகொள்வதே கிடையாது.
இதுகுறித்து கடந்த, 21ம் தேதி, நமது நாளிதழில் செய்தி, படம் வெளியானது. இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் இப்பிரச்னைக்கு தீர்வு காண முன்வந்துள்ளனர்.
இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் (சாலை பாதுகாப்பு) மனுநீதி கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனை சுற்றுவட்டார பகுதிகளில், ரயில்வே ஸ்டேஷன், பள்ளிகள், அரசு கல்லுாரி, கோர்ட் ஆகியவை இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்பட்டு வருகிறது. நெரிசலை குறைக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, மாநகர போலீஸ், போக்குவரத்து துறை, மருத்துவமனை நிர்வாகத்துடன் ஆலோசித்து, மருத்துவமனை பகுதியில் சில மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிறது 'யு டேர்ன்'
அதன்படி, மருத்துவமனை முன் உள்ள பழைய பஸ் நிறுத்தத்தை, மருத்துவமனையின் புதிய கட்டடம் (ஜைக்கா) முன் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு, அங்குள்ள மழைநீர் வடிகால் மேல் பகுதியில், பஸ் நிறுத்தம் நிழல் குடை அமைக்க, மாநகராட்சியிடம் அனுமதி கேட்டுள் ளோம்.
அதேபோல, பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் ஒரு 'யு டேர்ன்' அமைக்கப்படும். பஸ் நிறுத்தம் தாண்டி உள்ள சிக்னல் அகற்றப்பட்டு, செயின்ட் மேரிஸ் பள்ளி அருகே, மற்றொரு 'யு டேர்ன்' அமைக்கப்படும். இதனால் திருச்சி சாலையில், இருபுறமும் நேராக செல்லும் வாகனங்கள், நிறுத்தாமல் போய்க் கொண்டே இருக்கலாம்.
அரசு கல்லுாரி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், இடது புறம் திரும்பி செயின்ட் மேரிஸ் பள்ளி முன் உள்ள, 'யு டேர்னை' பயன்படுத்திக் கொள்ளலாம். வாலாங்குளம் பகுதியில் இருந்து வருபவர்கள், இடதுபுறம் திரும்பி மருத்துவமனை முன் உள்ள, 'யு டேர்னை' பயன்படுத்திக் கொள்ளலாம்.
மருத்துவமனைக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்த, மருத்துவமனை புதிய கட்டடம் (ஜைக்கா) எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தின் பின் பகுதியில் உள்ள காலி இடத்தில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள மதில் சுவரை அகற்ற, அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.