/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரை கவிழ்த்த காட்டு யானை; போலீஸ் எஸ்.ஐ., காயம்
/
காரை கவிழ்த்த காட்டு யானை; போலீஸ் எஸ்.ஐ., காயம்
ADDED : ஜூன் 11, 2024 11:15 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் - -கோத்தகிரி சாலையில் வியூ பாயிண்ட் அருகே காட்டு யானை ஒன்று அவ்வழியாக சென்ற காரை தாக்கி கவிழ்த்தது. இதில் காரில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம், சிறுமுகை, கோத்தகிரி வனச்சரகங்கள் வழியாக மேட்டுப்பாளையம் --கோத்தகிரி சாலை செல்கிறது. இந்த சாலையில் இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. யானைகளை கண்காணிக்க வனத்துறையினர் குழு அமைத்து 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மேட்டுப்பாளையம் -கோத்தகிரி சாலையில், ஊட்டியில் இருந்து பிங்கர் போஸ்ட் கருப்பன் ஓலை பகுதியை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர் மனோகரன், 52, தனது மகன் அன்பரசன், 24, உடன் தனக்கு சொந்தமான காரில், கோவை நோக்கி சென்றார்.
அப்போது, குஞ்சப்பனை அருகே உள்ள வியூ பாயிண்ட் சாலையின் குறுக்கே இரண்டு காட்டு யானைகள் நின்றுள்ளன. யானைகளை கண்ட அவர், காரை நிறுத்தி, அங்கேயே எந்த சத்தமும் போடாமல், யானைகள் வனப்பகுதிக்குள் செல்வதற்காக காத்திருந்தார்.
அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஒன்று, யானைகளை கண்ட பயத்தில் ஹாரன் அடித்ததில், அந்த சத்தத்தில் மிரண்டு போன இரு காட்டு யானைகளும் அங்கும், இங்கும் ஓடின.
அப்போது, மனோகரனின் காரை ஒரு யானை தந்ததால் குத்தி, தாக்கி கவிழ்த்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மனோகரனும் அவரது மகனும் உயிர் தப்பினர். மனோகரனுக்கு மட்டும் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், நீண்ட நேரமாக போராடி இரு யானைகளையும், வனப்பகுதிக்குள் விரட்டினர்.
பின் வனத்துறையினர் மற்றும் அவ்வழியாக சென்றவர்கள் மனோகரனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்.
இச்சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில், பெரும் பரப்பை ஏற்படுத்தியது. தற்போது கோத்தகிரி சாலையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், 'இச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் வனத்துறையினர் பாதுகாப்பிற்காக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதிக்குள் சென்ற இரு யானைகளும் மீண்டும் வந்துவிட்டால், அதனை சமாளிப்பதற்காக தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கோத்தகிரி சாலையில் பயணம் செய்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனத்தை இயக்க வேண்டும். யானைகளை கண்டால் அமைதியாக இருக்க வேண்டும். ஹாரன் அடிக்கக்கூடாது.
இரவு நேரத்தில் வாகனத்தின் ஹெட் லைட்டை டிம்மாக வைத்து கொள்ள வேண்டும். உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றார்.-----