/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு பணி தீவிரம்
/
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு பணி தீவிரம்
ADDED : மே 24, 2024 01:16 AM
கோவை;கோவை துணி வணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் பணி மற்றும் இல்லம் தேடி தன்னார்வலர்களுக்குப் பயிற்சி நடைபெற்று வருகிறது.
பள்ளி மாணவர்கள் அரசின் நலத்திட்டங்களைப் பெறவும், வங்கி சேவைகளைப் பெறவும் தற்போது ஆதார் எண் அவசியமான ஒன்றாக உள்ளது. ஆதார் இல்லாத மாணவர்கள் உதவித் தொகை அறிவிப்பு வந்தவுடன் அவசர அவசரமாக ஆதார் கோரி விண்ணப்பிக்கின்றனர். இதனால், மாணவர்களுக்கு நலத் திட்டங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.இப்பிரச்னையைத் தடுக்கும் பொருட்டு எல்காட் நிறுவனத்தின் உதவியுடன் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளிலேயே நேரடியாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் வகையில் ஆதார் மையங்களை அமைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மேலும், விண்ணப்ப பதிவு பணிக்காக கோவை மாவட்டத்தில் இல்லம் தேடி தன்னார்வலர்கள் 20 பேருக்கு நேற்று முன்தினம் முதல் துணி வணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.
ஆதார் விண்ணப்பப் பதிவு செய்வதற்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவர்கள் வந்திருந்தனர். இதில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறந்த பின்னரும் அந்தந்தப் பள்ளிகளில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மூலமாக மாணவர்களுக்கு ஆதார் அட்டை எடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.