/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் அலுவலகத்தில் ஆதார் சேவை முடக்கம்
/
தபால் அலுவலகத்தில் ஆதார் சேவை முடக்கம்
ADDED : ஆக 03, 2024 05:54 AM
வால்பாறை: வால்பாறை போஸ்ட் ஆபீசில், ஆதார் பதிவு சேவை முடங்கியுள்ளதால், பதிவுகள் மேற்கொள்ள வந்த மக்கள் திரும்பி செல்கின்றனர்.
அரசு வழங்கும் சலுகை, நலத்திட்டங்கள், திருமணப்பதிவு, வீடு, நிலம், வாகனங்கள் வாங்க, விற்க, என, அனைத்து விதமான சேவைக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாரில் எழுத்துப்பிழை, புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம் என மக்கள் திருத்தம் மேற்கொள்கின்றனர். ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள, தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ- சேவை மையங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில், வால்பாறை நகரில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் மக்கள் நலன் கருதி, ஆதார் பதிவு செய்யப்படுகிறது. ஆதாரில் திருத்தம் இருந்தால், 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
வால்பாறை தபால் அலுவலகத்தில், ஆதார் சேவைகள் துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இதற்கான பணியாளர்கள் நியமிக்காததால், தபால் ஊழியர்களே கூடுதல் பணியாக செய்து வருகின்றனர்.
இதனால் ஆதார் பதிவுக்கு செல்லும் மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆதார் பதிவு சேவை முடங்கியுள்ளதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
போஸ்ட் மாஸ்டர் கீதாவிடம் கேட்ட போது, ''வால்பாறை தபால் அலுவலகத்தில், ஆதார் சேவை பதிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பொள்ளாச்சி தபால் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதும், வழக்கம் போல் ஆதார் பதிவு சேவை துவங்கப்படும்,'' என்றனர்.