/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு கூடுதலாக ஒரு ரூபாய் வழங்குகிறது ஆவின்
/
பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு கூடுதலாக ஒரு ரூபாய் வழங்குகிறது ஆவின்
பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு கூடுதலாக ஒரு ரூபாய் வழங்குகிறது ஆவின்
பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு கூடுதலாக ஒரு ரூபாய் வழங்குகிறது ஆவின்
ADDED : பிப் 10, 2025 05:49 AM
கோவை : கோவை மாவட்டத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக வழங்க, ஆவின் நிறுவனம் முன்வந்துள்ளது.
கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) கட்டுப்பாட்டில், 329 கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. 7,650 பால் உற்பத்தியாளர்கள், ஆவின் நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்கின்றனர்.
நாளொன்றுக்கு ஒரு லட்சத்து, 38 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 15 ஆயிரம் லிட்டர், கிராம அளவிலேயே அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு சில்லறையில் விற்கப்படுகிறது. மீதமுள்ள பால் குளிரூட்டும் நிலையத்துக்கு தருவிக்கப்பட்டு, பாக்கெட் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் இதர பகுதிகளுக்கு அனுப்பி விற்கப்படுகிறது.
ஒன்றியம் சார்பில் ஒரு லிட்டர் பால் கொள்முதலுக்கு ரூ.35, அரசு சார்பில் ஊக்கத்தொகையாக, 3 ரூபாய் சேர்த்து, 38 ரூபாய் வழங்கப்படுகிறது. ஜன., - பிப்., - மார்ச் மாதங்கள் வறட்சியான கால கட்டம் என்பதால், பால் உற்பத்தியை பெருக்கும் வகையில், உற்பத்தியாளர்களுக்கு ஒன்றியம் சார்பில் லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, ஜன., - பிப்., மாதங்களில் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கிய உறுப்பினர்களுக்கு, லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். உறுப்பினர்களின் ஆதரவுக்கேற்ப மார்ச் மாதம் நீட்டிக்க வாய்ப்பிருக்கிறது.
ஆவின் பொது மேலாளர் சண்முகம் கூறுகையில், ''பால் உற்பத்தியை பெருக்க, கிராம மக்கள் கறவை மாடுகள் வாங்க, வங்கிகளுடன் இணைந்து கடன் மேளா நடத்துகிறோம். விருப்பமுள்ளோர் விண்ணப்பித்தால், கறவை மாடு கொள்முதல் செய்து கொடுக்கிறோம்.
''கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தீவனம் வழங்குகிறோம். செயற்கை முறை கருவூட்டல் செய்து கொடுக்கிறோம். புதிய பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பதிவு செய்வது, துணை மையம் அமைத்து தரக்கோரினால், மூன்று நாளில் பதிவு செய்து தருகிறோம்,'' என்றார்.