/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேகத்தடைகளால் அதிகரிக்கும் விபத்துகள்!
/
வேகத்தடைகளால் அதிகரிக்கும் விபத்துகள்!
ADDED : ஜூன் 30, 2024 11:05 PM

கோவை:மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தேவையின்றி உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை மாநகராட்சி, 254 சதுர கி.மீ., பரப்பில் பரந்து விரிந்துள்ளது. மாநகராட்சியில், 2,759 கி.மீ., நீளமுடைய, 1,000 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இவற்றில் முக்கிய சந்திப்புகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், விபத்துகளை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன.
வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. விபத்துக்களை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சில வேகத்தடைகள், இன்று விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றன.
காற்றில் பறந்த விதிகள்
நகரில் வேகத்தடைகள் அமைப்பதற்கு, பல்வேறு விதிகள் உள்ளன. விதியில், வேகத்தடைகளின் நீளம், உயரம், எந்தெந்த பகுதிகளில் அமைக்க வேண்டும் உள்ளிட்டவை தெளிவாக கூறப்பட்டுள்ளன.
ஆனால், இன்று அந்த விதிகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டு, ஒப்பந்ததாரர்கள், கவுன்சிலர்கள், குடியிருப்பு சங்கங்கள், தனி நபர்கள், போலீசார் சார்பில், கண்ட இடங்களில் வேகத்தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி நிர்வாகம் மட்டுமே வேகத்தடைகளை அமைக்க முடியும். ஆனால், சமீபகாலமாக யார் வேண்டும் என்றாலும், வேகத்தடைகளை அமைத்து கொள்ளலாம் என்ற நிலை உள்ளது.
வெள்ளையும் பூசுவதில்லை
இது ஒருபுறம் இருக்க, விதிகளை மீறி ஏற்படுத்தப்படும் வேகத்தடைகளில் வெள்ளை பூசப்படுவதில்லை. இதனால், அவை இருப்பது தெரிவதில்லை என்பதால், வேகமாக வரும் வாகனங்கள் துாக்கி வீசப்பட்டு விபத்துக்கு உள்ளாகின்றன. குறிப்பாக, இரவில் இவ்வகை விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.
அதேபோல், குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகவும், உயரமாகவும் வேகத்தடைகளை ஏற்படுத்துவதால், சிறு வாகனங்களை ஓட்டிச் செல்லும் பெண்கள் விபத்துகளில் சிக்குகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கொடிசியா அருகே அனுமதியின்றி ஏற்படுத்தப்பட்ட வேகத்தடையால், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.
ஆகவே, அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத்தடைகள் குறித்த தகவல்களை திரட்டி, தேவையில்லாத வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.