/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உழைப்பால், சேவையால் உயர்ந்த நிலையை அடையலாம்'
/
'உழைப்பால், சேவையால் உயர்ந்த நிலையை அடையலாம்'
ADDED : மே 20, 2024 11:01 PM

சூலூர்:'உழைப்பாலும், சேவை மனப்பான்மையாலும் ஒவ்வொருவரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்,' என, நீதி போதனை கல்வி பயிற்சியாளர் ராஜ. முரளிதரன் பேசினார்.
முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், 28 மாத விழிப்புணர்வு சொற்பொழிவு விவேகானந்தர் அரங்கத்தில் நடந்தது. இயக்க தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற மகத்தான மனிதர்கள் என்ற தலைப்பில் நீதி போதனை கல்வி பயிற்சியாளர் ராஜ. முரளிதரன் பேசியதாவது:
உலகின் பல பகுதிகளில் பிரசித்தி பெற்ற மகத்தான மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களை பற்றி படித்துள்ளோம். ஆனால், தமிழகத்தில் நம் பகுதியில் வாழ்ந்த பிரசித்தி பெற்ற சாதனை மனிதர்கள், ஆன்மீக சான்றோர்கள், விஞ்ஞானிகள், தொழில் வல்லுனர்கள், மருத்துவர்கள் குறித்து நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
சூலூர் அடுத்த கலங்கல் கிராமத்தில் பிறந்து பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் உலக புகழ் பெற்றவர் ஜி.டி.நாயுடு. அவரது செயல்பாடுகள் இளைய தலைமுறைக்கு ஊக்க சக்தியாக இன்றும் உள்ளது.
சென்னை அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் மூலம் கொடிய நோய் குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, மக்களின் துயர் துடைத்தவர் மருத்துவர் சாந்தா. அதேபோல், அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் வேங்டசாமி உலகில் பல லட்சம் மக்களுக்கு பார்வை கிடைக்க உழைத்தவர்.
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பின் மூலம் பிரசித்தி பெற்ற அய்ய நாடார், ஜவுளி உற்பத்தி மூலம் புரட்சி செய்யும் ராம்ராஜ் நிறுவனர் நாகராஜன் ஆகியோர் தங்களது உழைப்பாலும், சேவை மனப்பான்மையாலும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கின்றனர்.
இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்லும் அளவுக்கு தன்னலமற்று உழைப்பாலும், சேவையாலும் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை சாதித்து காட்டியவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் குறித்து இளைய தலைமுறைக்கு சொல்லி கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

