/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடகோவை ஸ்டேஷனில் அடடே வசதிகள்! லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம்; ரூ.7.30 கோடி ஒதுக்கீடு
/
வடகோவை ஸ்டேஷனில் அடடே வசதிகள்! லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம்; ரூ.7.30 கோடி ஒதுக்கீடு
வடகோவை ஸ்டேஷனில் அடடே வசதிகள்! லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம்; ரூ.7.30 கோடி ஒதுக்கீடு
வடகோவை ஸ்டேஷனில் அடடே வசதிகள்! லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம்; ரூ.7.30 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூன் 12, 2024 10:34 PM

கோவை : 'அம்ரித் பாரத்' திட்டத்தில், ரூ.7.30 கோடியில், வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது நடைமேம்பாலம் மற்றும் பிளாட்பாரத்தில் மேற்கூரை புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
கோவையில் கோவை சந்திப்பு மற்றும் போத்தனுார் சந்திப்பு, வடகோவை சந்திப்பு என மூன்று ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. கோவை சந்திப்பை மேம்படுத்த ரூ.700 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே, 'அம்ரித் பாரத்' திட்டத்தில் வடகோவை ரயில்வே ஸ்டேஷன் ரூ.7.30 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இரண்டு 'பிளாட்பார்ம்'கள் இருக்கின்றன. 29 ரயில்கள் கையாள்வதற்கான வசதிகள் இருக்கின்றன.
2014ல் இந்த ஸ்டேஷனுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நடப்பட்டு, 2015ல் முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது; ஒன்பது ஆண்டுகளுக்கு பின், தற்போது மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.
டாடாபாத் வழியாக வரும் பயணிகளுக்கு, நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழி புதிதாக உருவாக்கப்படுகிறது. டிக்கெட் எடுத்த பின், லிப்ட்டில் பயணித்து பிளாட்பாரத்துக்கு செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
நடந்து செல்ல விரும்புவோர், படிக்கட்டுகள் வழியாக செல்லலாம். மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வருவோரும், வடகோவை ஸ்டேஷனை பயன்படுத்தும் வகையில் லிப்ட் வசதியுடன் நடைமேம்பாலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
குளிரூட்டும் வசதியுடன் பயணிகள் காத்திருப்பு கூடங்கள் புதிதாக கட்டப்படுகின்றன. கழிப்பறைகள், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகின்றன.
பசுமை பரப்பு ஏற்படுத்த ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்கள் வந்து செல்லும் நேரம் அறிவிக்கும் 'டிஸ்பிளே போர்டு', பிளாட்பாரத்தில் நடைபாதை, பல்புகள் புதியதாக அமைக்கப்படுகின்றன.
இன்னும் இரு மாதங்களுக்குள், பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வரும் பயணிகளும், வடகோவை ஸ்டேஷனை பயன்படுத்தும் வகையில், தேவையான வசதிகள் செய்யப்படுகின்றன.

