/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க., பொதுக்கூட்ட மேடைக்கு எதிர்ப்பு! கட்சியினர் போராட்டத்தால் பரபரப்பு
/
அ.தி.மு.க., பொதுக்கூட்ட மேடைக்கு எதிர்ப்பு! கட்சியினர் போராட்டத்தால் பரபரப்பு
அ.தி.மு.க., பொதுக்கூட்ட மேடைக்கு எதிர்ப்பு! கட்சியினர் போராட்டத்தால் பரபரப்பு
அ.தி.மு.க., பொதுக்கூட்ட மேடைக்கு எதிர்ப்பு! கட்சியினர் போராட்டத்தால் பரபரப்பு
ADDED : ஏப் 09, 2024 11:52 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து, அக்கட்சி பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று பிரசாரம் செய்கிறார். இதற்காக, திருவள்ளுவர் திடல் அருகே, மாநில நெடுஞ்சாலையில், அ.தி.மு.க., பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சப் - கலெக்டர் அலுவலகத்தை தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க.,வினர் கூறியதாவது:
அ.தி.மு.க., பொதுக்கூட்ட மேடை, மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேடை அமைக்கும் இடம் அருகே பள்ளிவாசல் உள்ளது; ரம்ஜான் பண்டிகை என்பதால் இஸ்லாமியர்கள் அதிகளவு வந்து செல்வர்.
அதனால், அந்த இடத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து, மாற்று இடம் வழங்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
இதையடுத்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா, டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் ஆகியோர், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
அ.தி.மு.க., போராட்டம்
அ.தி.மு.க., மேடை அமைக்கும் இடத்தில், போலீசார் பணிகளை நிறுத்த கூறினர். இதையடுத்து, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ., கூறியதாவது:
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பங்கேற்கும் கூட்டத்துக்கு கடும் முயற்சி செய்து நேற்று முன்தினம் தான் அனுமதி கிடைத்தது.கடந்த தேர்தல்களின் போதும் இதே இடத்தில் தான் கூட்டம் நடத்தினோம். தற்போது தி.மு.க.,வின் துாண்டுதலின் பேரில் அவர்களது கைப்பாவையாக செயல்படும் போலீசார், மேடை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துகின்றனர்.
போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தான் மேடை அமைத்துள்ளோம். முறையான அனுமதி பெற்றிருந்தாலும், தடை விதிப்பது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு, கூறினார்.

