/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சியில் 'அட்வான்ஸ் ஒர்க்' ஊழல்! ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு
/
மாநகராட்சியில் 'அட்வான்ஸ் ஒர்க்' ஊழல்! ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு
மாநகராட்சியில் 'அட்வான்ஸ் ஒர்க்' ஊழல்! ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு
மாநகராட்சியில் 'அட்வான்ஸ் ஒர்க்' ஊழல்! ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு
ADDED : மே 06, 2024 12:26 AM
கோவை:'கோவை மாநகராட்சியில், 'அட்வான்ஸ் ஒர்க்' ஊழல் நடைபெறுகிறது' என, ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது; சங்கத் தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரபிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன் முன்னிலை வகித்தனர்.
அதில், நிறைவேற்றிய தீர்மானங்கள்:
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சியில் மேற்கொள்ளும் பணிகளில், தகுதியில்லாத நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்நிறுவனத்தினர் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய்வதில்லை. போலியான ஆவணங்களை வைத்து பணிகளை துவக்கி வருகிறார்கள். பல ஆண்டுகள் ஒப்பந்த பணி செய்து வரும் நேர்மையான ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. தகுதியற்ற ஒப்பந்ததாரர்கள் தரமற்ற பணிகளை செய்து ஒப்பந்ததாரர்களுக்கும், மாநகராட்சி மற்றும் அரசு துறைகளுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர். அதிகாரிகள் துணையுடன் பல கோடி ரூபாய் மோசடி செய்து வருகின்றனர். இதற்கு சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
'ஷெட்யூல் ஆப் ரேட்' டில் இல்லாத பணிகளை சேர்த்து, அதிக விலைப்புள்ளி மதிப்பீடு தயாரித்து, டெண்டர் கோருவதற்கு, 10 நாட்களுக்கு முன்பே 'அட்வான்ஸ் ஒர்க்' என்ற பெயரில், முன்கூட்டியே செய்கிறார்கள். இதுபோன்ற பணிகளுக்கு யாரும் டெண்டர் போட வேண்டாம் என சம்பந்தப்பட்ட அரசு துறையினர் கூறுகின்றனர். இது, நுாதன முறையில் நடைபெற்று வரும் மெகா ஊழல். இதுதொடர்பாக அனைத்து அரசுத் துறையினருக்கும் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். 'அட்வான்ஸ் ஒர்க்' என்ற பெயரில் நடந்த அனைத்து பணிகளின் விலைப்புள்ளிகளை ஆய்வு செய்து, அதில் உள்ள தவறுகள் தொடர்பாக புகார் அளிக்கப்படும்.
கோவை மாநகராட்சி கணக்கு பிரிவு அலுவலர்கள், மூன்றாண்டுகளுக்கு மேலாக கோப்புகளை சரியாக பராமரிக்கவில்லை. எந்தெந்த ஒப்பந்ததாரர்களுக்கு எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்ற கணக்குகளை முறையாக பராமரிக்காமல், அலட்சியமாக செயல்படுகிறார்கள். அவர்களுக்கு சாதகமான ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே டெபாசிட் தொகை முழுவதுமாக திரும்ப வழங்குகிறார்கள். ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகையை சீனியாரிட்டி அடிப்படையில் வழங்க வேண்டும். சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் பில் தொகை வழங்கி விட்டு, மற்றவர்களுக்கு கிடப்பில் போடுகிறார்கள். இதுதொடர்பாக, மாநகராட்சி கணக்கு பிரிவினர் மீது புகார் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.