/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாங்கான தொழில்நுட்பம் வேளாண்துறை அறிவுரை
/
பாங்கான தொழில்நுட்பம் வேளாண்துறை அறிவுரை
ADDED : ஜூலை 17, 2024 11:45 PM
பெ.நா.பாளையம் : 'பாங்கான வேளாண்' முறையை பயன்படுத்தி, குறைந்த செலவில் அதிக பலன் பெற முடியும் என, வேளாண்துறை, விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
'கன்சர்வேஷன் அக்ரிகல்ச்சர்' எனப்படும், பாங்கான வேளாண்மை தொழில் நுட்பமானது அதிக உற்பத்தி திறன் உள்ள நிலைத்த, செம்மையான, மண்வள மற்றும் நீர்வள பாதுகாப்பு தரக்கூடிய, தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.
குறைந்த உழவு அல்லது உழவில்லா பயிராக்கம், நிலையான பசுமை போர்வை மற்றும் பயிர் சுழற்சி ஆகியவற்றை அடிப்படை தத்துவங்களாக கொண்டுள்ள பாங்கான விவசாயம் என்பது குறைந்த மனித மற்றும் இயந்திர நாட்களில் நிலைத்த மற்றும் சீரிய உற்பத்தியை தரவல்ல தொழில் நுட்பமாகும்.
நீர் மேலாண்மையில், நுண்ணிய நீர்ப்பாசன முறைகள், நீர் வழி உரமிடுதல் வாயிலாக நீர் மற்றும் உரத்தின் பயன்பாட்டு திறனை அதிகப்படுத்தலாம். பயிர் கழிவு நில போர்வையில், பயிர் கழிவு மறுசுழற்சி செய்வதால், மண் அரிப்பை தடுப்பதோடு, நீர் ஆவியாவதை குறைத்து, நீர் தேவைகளை குறைக்கலாம்.
மண்ணின் உயிர் தன்மையை அதிகரிக்கலாம். பயிர் மேலாண்மை வாயிலாக, மண்ணில் ஆரோக்கியம் கூடுகிறது. உற்பத்தி பொருளின் தரம் மேம்படுகிறது என, வேளாண்துறையினர் கூறினர்.