/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகளுக்கு குறித்த நேரத்தில் தடுப்பூசி பால் உற்பத்தி அதிகரிக்க அட்வைஸ்
/
கால்நடைகளுக்கு குறித்த நேரத்தில் தடுப்பூசி பால் உற்பத்தி அதிகரிக்க அட்வைஸ்
கால்நடைகளுக்கு குறித்த நேரத்தில் தடுப்பூசி பால் உற்பத்தி அதிகரிக்க அட்வைஸ்
கால்நடைகளுக்கு குறித்த நேரத்தில் தடுப்பூசி பால் உற்பத்தி அதிகரிக்க அட்வைஸ்
ADDED : மார் 06, 2025 09:59 PM
உடுமலை, ;'கலப்பின மாட்டுக்கன்றுகளுக்கு, கோமாரி உட்பட தடுப்பூசிகளை, குறித்த நேரத்தில், குறிப்பிட்ட காலகட்டத்தில், போடுவது அவசியமாகும்,' என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், பால் உற்பத்திக்காக, அதிகளவு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக, கலப்பின மாடு, கன்றுகள், கிராமங்களில் அதிகளவு பராமரிக்கப்படுகிறது.
இந்நிலையில், கலப்பின மாடுகளின் கன்றுகளுக்கு குறித்த நேரத்தில், கோமாரி, தொண்டை அடைப்பான், சப்பை நோய் ஆகியவற்றுக்கான தடுப்பூசிகளை தவறாமல் போட வேண்டும் என, கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துறையினர் கூறியதாவது: பால் உற்பத்தியை அதிகரிக்க, செயற்கை முறை கருவூட்டல் வாயிலாக, கலப்பினங்கள் உருவாக்கப்படுகின்றன.கன்றுகளின் பராமரிப்பு, கர்ப்பத்தில் இருந்தே துவங்குகிறது.
அதன்படி, சினை மாடுகளில் கடைசி 8 வாரங்களில், பால் கறவையை நிறுத்தி விட வேண்டும். இதனால், கன்றுகள் நல்ல வளர்ச்சியடையும். கன்றுகளின் எடைக்கேற்ப அளவு பால் கொடுக்க வேண்டும்.
வயது, 3-5 வாரமாகும் போது, 100-250 கிராம் கலப்பு தீவனமும், 300-500 கிராம் காய்ந்த புல் தீவனமாக அளிக்கலாம். கன்றின் மூன்று மாதத்தில் இருந்து, ஒரு கிலோ கலப்பு தீவனமும், 10 கிலோ பசும்புல்லும் அளிக்கலாம். முறையான இடைவெளியில், குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
கன்றுகளின், 45வது நாளில், கோமாரி நோய் தடுப்புக்கான முதல் தடுப்பூசி போட வேண்டும். இரண்டாவது தடுப்பூசி-18 வது வாரத்திலும், மூன்றாவது தடுப்பூசி-28 வது வாரத்திலும், வளர்ந்த மாடுகளுக்கு, 6 மாதத்துக்கு ஒரு முறையும் இந்த தடுப்பூசி போட வேண்டும்.
தொண்டை அடைப்பான் மற்றும் சப்பை நோய்க்கான தடுப்பூசியை 6 மாதத்துக்கு மேற்பட்ட எல்லா மாடுகளுக்கும், ஆண்டுக்கு ஒரு முறை போட வேண்டும்.
கன்றுகள் மற்ற கன்றுகளை நக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால், அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். இதைத்தடுக்க, கன்றுகளுக்கு பயன்படும் தாது உப்புகள் அடங்கிய கட்டியை கன்று இருக்கும் இடத்தில் கட்டி தொங்க விட வேண்டும்.
தேவையான தாதுக்கள் கிடைக்கும் போது, மற்ற கன்றுகளை நக்குவது போன்ற செயல்களில் கலப்பின மாடுகளின் கன்றுகள் ஈடுபடாது. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றினால், கன்றுகள் வளர்ச்சி சீராக இருக்கும்; பால் உற்பத்தியும் அதிகரிக்கும்.
இவ்வாறு, கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.