/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடையின்மை சான்று அனுப்ப ஊராட்சிகளுக்கு அறிவுரை
/
தடையின்மை சான்று அனுப்ப ஊராட்சிகளுக்கு அறிவுரை
ADDED : மே 12, 2024 11:03 PM
அன்னூர்:வழிபாட்டுத் தலம் கட்டி, வழிபாடு நடத்த அனுமதி கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து விரைவில் பரிந்துரை அனுப்ப ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர், அன்னூர், காரமடை, சூலூர், பெரியநாயக்கன் பாளையம், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது :
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட உள்ளாட்சிப் பகுதியில், சர்ச், மசூதி மற்றும் கோவில் போன்ற வழிபாடு தலங்கள் கட்டி, அதில் இறைவழிபாடு நடத்தவும், கல்லறைத் தோட்டம் அமைக்கவும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன.
இந்த விண்ணப்பங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களிடமிருந்து தடையின்மை சான்று அனுப்பி வைக்கும்படி பலமுறை கடிதம் அனுப்பியும், அலைபேசியில் தெரிவித்தும், பதில் வராமல் நிலுவையில் உள்ளது.
அன்னூர் ஒன்றியத்தில், குப்பனூர், காரேகவுண்டன்பாளையம், குன்னத்தூர் ஆகிய ஊர்களிலும், காரமடை ஒன்றியத்தில் காளம் பாளையத்திலும், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் குருடம்பாளையத்திலும், விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
சம்பந்தப்பட்ட ஊராட்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி) உரிய விசாரணை செய்து தங்களது குறிப்புரையுடன் ஊராட்சி மன்ற தீர்மான நகலையும் சேர்த்து விரைவில் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.