sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி... கண்கொள்ளா காட்சி! நவீன தொழில்நுட்ப கருவிகளுக்கான பதிவே சாட்சி

/

'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி... கண்கொள்ளா காட்சி! நவீன தொழில்நுட்ப கருவிகளுக்கான பதிவே சாட்சி

'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி... கண்கொள்ளா காட்சி! நவீன தொழில்நுட்ப கருவிகளுக்கான பதிவே சாட்சி

'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி... கண்கொள்ளா காட்சி! நவீன தொழில்நுட்ப கருவிகளுக்கான பதிவே சாட்சி


ADDED : ஜூலை 15, 2024 01:31 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை கொடிசியாவில் நடந்து வரும் வேளாண் கண்காட்சியில், விடுமுறை நாளான நேற்று, திரளான விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கோவை கொடிசியா சார்பில், 'அக்ரி இன்டெக்ஸ்' என்ற 22வது வேளாண் கண்காட்சி, தொழிற்காட்சி வளாகத்தில், கடந்த 11ம் தேதி துவங்கியது. வழக்கமாக நான்கு நாட்கள் நடத்தப்படும் கண்காட்சி, அதிக வரவேற்பின் காரணமாக, இம்முறை ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது.

விடுமுறை நாளான நேற்று, காலை முதலே, விவசாயிகள், பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. பலர், குடும்ப சகிதமாக வந்திருந்தனர். கோவையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்ததால், 'பார்க்கிங்' ஏரியா நிரம்பியது.

விதைகளின் கூடாரம்


கண்காட்சியில், கீரைகளுக்கு பல அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய கீரை விதைகள், பூ வகைகள், மர வகை விதைகள் மற்றும் நாற்றுகள், கொடி வகை விதைகளை வாங்குவதில் பலர் ஆர்வம் செலுத்தினர்.

கிழங்குகளில் இத்தனை வகைகளா என வியக்க வைக்கும் அளவுக்கு, ஆட்டு கொம்பு, காவள்ளி, அதலைக்காய், பெருவள்ளி, ஆகாச கருடன், முடவாட்டுக்கால் ஆகிய பெயர்களில் கிழங்கு வகைகள் வைக்கப்பட்டுள்ளன.

விதவிதமான தராசுகள்


பணம் எண்ணுவதற்கு, நகைகள் மற்றும் விதைகள் எடை பார்ப்பதற்கு தனி இயந்திரம், கோழிக்கடைகளில் பயன்படுத்துவதற்கு, கால்நடைகளின் எடையை சரிபார்ப்பதற்கு என, தனித்தனியான இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதன் உரிமையாளர்கள் வினியோகிப்பது மட்டுமல்லாமல், பழுது பார்ப்பது, குறித்த காலத்தில் அரசு முத்திரையிட ஏற்பாடு செய்வது என, அனைத்தும் செய்து கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

இனி மண் வேண்டாம்


மாடித் தோட்டத்துக்கு, சற்று பெரியளவிலான செடிகள் வைக்கும் போது, அதிக மண் தேவைப்படும். அரங்கில் இதற்கென வைக்கப்பட்டிருந்த அரங்குகளில், மாடித் தோட்டத்துக்கு என, மண் போன்ற ஒரு கலவை தயாரித்து வழங்குகின்றனர். அவ்வப்போது, செடி மற்றும் மரங்களுக்கு ஏற்ப, ஒரு ஸ்பூன், இரண்டு ஸ்பூன் உரம் சேர்த்தால் போதும் என்கின்றனர்.

விவசாயிகளுக்கு உறுதி


செடிகளுக்கான உரத்துக்கு, தனியாக மண்புழு உரம் வைத்திருந்தாலும், பல கலவைகளாக, அதாவது, மண் புழு உரம், கோழி எரு, ஆட்டு எரு, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, கடல் பாசி உட்பட 14 வகையான பொருட்கள் அடங்கிய உரம் பாக்கெட்கள் உள்ளன.

இதுபோன்ற உரம் தயாரிப்பாளர்கள் பலர், நிலத்துக்கு வந்து ஆய்வு செய்து, என்னமாதிரியான உரங்கள் இடலாம் என்று, ஆலோசனை சொல்லவும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

தென்னைக்கு என்ன செய்யலாம்


தென்னையில் நோய் தாக்குதல், பராமரிக்க முடியாதது உட்பட பல்வேறு காரணங்களால், தென்னை விவசாயம் மேற்கொள்வதில் சில சிக்கல்கள் நீடிக்கின்றன. இதை நீக்க, நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம் என, விவசாயிகளை அழைத்தது ஒரு அரங்கு. ஓய்வு பெற்ற வேளாண் பேராசிரியர் ஒருவரின் தலைமையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்த சேவையை செய்து வருவதாக தெரிவித்தனர். இவர்களின் கட்டணமில்லா எண்: 1800 266 4646.

கம்பீரமாய் ஒரு வாகனம்


வாகனங்களுக்கான பிரிவில், கம்பீரமாய் நின்றிருந்தது ஒரு வாகனம். கரும்பு அறுவடை செய்யக்கூடிய நவீன இயந்திரம். பெயர் கார்டர். ஒரு மணி நேரத்தில் 20 முதல் 25 டன் வரை கரும்பு அறுவடை செய்ய முடியுமாம். அசோக் லேலண்ட் என்ஜின் கொண்டது. ஒரு மணி நேரம் அறுவடை செய்ய, 17 லிட்டர் டீசல் மட்டுமே பிடிக்குமாம். கரும்பு அறுவடையில் ஆட்கள் பற்றாக்குறையை தவிர்க்க, இந்த 'கார்டர்' நிச்சயம் கைகொடுக்கும் என்று, நம்பிக்கை தெரிவித்தனர்.

பாயில் வளர்க்கலாம் நெல்


இந்த அரங்கில், நெல் நாற்றுகளை தாங்களே வளர்த்து, அதை நெல் பாய் வாயிலாக, மண் இல்லாமல் விளைவிக்க முடியும் என்கின்றனர். வளர்ந்திருக்கும் நெல் நாற்றுகளை வேறொரு இடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும், இந்த நெல் பாயை அப்படியே சுருட்டிக் கொண்டு சென்று, விரும்பி இடத்தில் வளர்க்கலாம்.

தண்ணீர் தொட்டி


பிரம்மாண்டமாய் கவர்கின்றன தண்ணீர் தொட்டிகள். மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள், 200 லிட்டரில் துவங்கி, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு வரை காட்சிக்கு வைத்திருந்தனர். கீழ்நிலை நீர் தொட்டியையும், சிமென்டால் இனி கட்ட வேண்டாம். அதற்கும் தொட்டி இருக்கிறது; அந்த தொட்டியை வைத்து விடலாம். மண்ணாலும் மூடிக் கொள்ளலாம்.

வெட்டி வேரு வாசம்


வெட்டி வேரின் மகிமை, இப்போதிருக்கும் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை உணர்த்தியது ஒரு அரங்கு. உடல் நலத்துக்கு நல்லது செய்யும் வெட்டி வேர் என்று, அரங்கில் இருந்தவர்கள் சொல்லிக் கொண்டே, விளாமிச்ச வேர் மாலை மற்றும் கார் பிரஷ், வெட்டிவேர் முகப்பவுடர், குளியல் சோப், கொசுவர்த்தி என, ஏராளமான பொருட்களை விளக்கினர். வாசத்தால் பலரை திரும்பி பார்க்க வைத்தது அரங்கு.

மீனை கூட பவுடராக்கலாம்


தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் சார்பில், மீன் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இறால் ஊறுகாய், மீன் சூப் பொடி, மீன் இட்லிப் பொடி, மீன் பவுடரால் தயாரிக்கப்பட்ட கேக் போன்ற பல பொருட்கள் உண்டு.

மீனின் சதை பாகத்தை, நன்றாக காய வைத்து, பொடியாக வரக்கூடிய பக்குவம் வந்ததும், அதை மிக்சியில் அரைத்து பொடியாக்கி, எதனுடனும் தொட்டு உண்ணலாம்.

கரென்ட் பில் இனி குறையும்


மின்சாரத்தை சேமிக்க பல வழிகள் வந்து விட்டன. அதில், ஒன்று சோலார் மின்சாரம். மத்திய அரசு இதற்கென தனியாக மானியமும் வழங்குகிறது. மாடியிலோ அல்லது வேறு பகுதிகளிலோ, 2 முதல் 5 கிலோ வாட் வரை சோலார் பேனல் அமைக்க முடியும். வங்கி கடன் வசதியும் உள்ளது. 1.60 லட்சத்தில் சோலார் பேனல் அமைக்கும் போது, ரூ.60 ஆயிரம் மானியம் கிடைக்கும். இதுபோல், ஒவ்வொரு பேனலுக்கும் பலவிதமான மானியம் வழங்கப்படுகிறது.

சூரிய கூடார உலர்த்தி


ஒரு பொருளை உலர்த்த, குறிப்பிட்ட வெப்பநிலையை விட அதிகமாகும் போது, அந்த பொருளின் தன்மை மற்றும் நிறம் பாதிக்கப்படும். அதே நேரத்தில், உலர்த்தியின் உள்ளே உள்ள ஈரப்பதம், குறிப்பிட்ட அளவை விட அதிகமானால், பொருள் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பில் இருந்து பாதுகாக்க, வெப்பம் மற்றும் ஈரப்பதக் கட்டுப்பாட்டு கருவி, சூரிய கூடார உலர்த்தியில் பொருத்தி, விற்பனைக்கு வந்துள்ளது.

வருங்காலம் இனி 'ட்ரோன்' காலம்

விவசாயத்தில் மிகப்பெரிய விஷயம், உரம், மருந்து தெளிப்பது. நெல் நடவு முதல் அறுவடை வரை, இதற்கான ஆட்கள் கிடைப்பது சவாலாக இருக்கிறது.இதற்காக, ட்ரோன் தொழில்நுட்பம் வந்து விட்டது. இதன் வாயிலாக எளிதில் மருந்து தெளித்து விடலாம். இந்த ட்ரோனை இயக்க, ஒரு நபர் போதுமானது. அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில், இதற்கான ஒரு அரங்கில், வீட்டு மனை குறித்து துல்லியமாக அளவெடுக்கவும், கல் குவாரி மற்றும் மணல் குவாரிகளின் அளவுகளை கணக்கெடுக்கவும், பெரிய, பெரிய நிறுவனங்களின் கண்காணிப்புக்காகவும் என, ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதாக விளக்கினர். பகல் நேரத்தில் 2 கி.மீ., துாரத்துக்கும், இரவு நேரங்களில் 800 மீட்டருக்குள்ளும், இந்த ட்ரோன்களை பயன்படுத்த முடியுமாம்.தற்போது, விவசாயத்துக்கு மருந்து தெளிப்பதில், ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 10 லிட்டர் மருந்தில், ஒரு ஏக்கருக்கு ட்ரோன் வாயிலாக மருந்து தெளிக்க, ஐந்து முதல் 7 நிமிடங்கள் வரைதான் ஆகுமாம். ஐந்து செட் பேட்டரிகள் இருந்தால், ஒரு நாளில், 36 ஏக்கர் வரை பயன்படுத்த முடியும்.








      Dinamalar
      Follow us