/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அக்ரி இன்டெக்ஸ்: சிறிய ரக இயந்திரங்கள் வாங்க விவசாயிகள் ஆர்வம்
/
அக்ரி இன்டெக்ஸ்: சிறிய ரக இயந்திரங்கள் வாங்க விவசாயிகள் ஆர்வம்
அக்ரி இன்டெக்ஸ்: சிறிய ரக இயந்திரங்கள் வாங்க விவசாயிகள் ஆர்வம்
அக்ரி இன்டெக்ஸ்: சிறிய ரக இயந்திரங்கள் வாங்க விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூலை 12, 2024 11:13 PM

கோவை;கோவை, கொடிசியாவில் நடந்து வரும் அக்ரி இன்டெக்ஸ் வேளாண் கண்காட்சியில், சிறிய ரக இயந்திரங்கள் கருவிகள் பற்றி அறிந்து கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
கொடிசியா வளாகத்தில், அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி 5 நாட்கள் நடக்கிறது. வெளிநாடுகள் உட்பட 490 பங்கேற்பாளர்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளனர்.
டிரோன்கள், துல்லிய வேளாண்மை, மின்சார வாகனங்கள், சொட்டு நீர், நுண்ணீர்ப் பாசனம், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, வேலி, நிதி நிறுவனங்கள், மீன் வளர்ப்பு, பம்ப், விதைகள், டிராக்டர், விதைப்பு மற்றும் அறுவடை இயந்திரங்கள், தானியம் பிரிக்கும் இயந்திரங்கள், பொக்லைன் உள்ளிட்ட சிறு ரக கனரக இயந்திரங்கள், சிறு, சிறு வேளாண் உபகரணங்கள், நர்சரி என வேளாண் சார்ந்த அனைத்து துறைகளிலும் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இவற்றை விவசாயிகள் ஆர்வமாக பார்வையிட்டனர். நவீன உபகரணங்கள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
தோட்டக்கலை சார்ந்த, லோப்பர், சியர், பர்னர், கைக் களைக் கருவிகள், ரம்பம், காய் பறிக்கும் கருவிகள், சுமை தள்ளு வண்டிகள், பால் கறவை பம்ப்கள் உள்ளிட்டவற்றில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர்.
குறிப்பாக, வேளாண் கழிவுகளை துகள்களாக்கும் ஷ்ரெடர், வாழைக்கு நடுவில் உழவு செய்வதற்கான இயந்திரம், புல்வரைசர், தானியங்கள் அடிக்கும் இயந்திரம், நெல் கதிரடிக்கும் இயந்திரம், மக்காச்சோளம் அடிக்கும் இயந்திரம், மினி டிராக்டர் உள்ளிட்டவற்றைப் பற்றி அறிந்து கொள்ள பேரார்வம் காட்டினர்.
காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.
அக்ரி இன்டெக்ஸ்
மாடித்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு வரம்
'எஸ்.ஏ.பி.,' ஈரத்தை தக்க வைக்கும் ஒரு வாரம்
-------------
வீடுகளில் பூச்செடி, மாடித் தோட்டம் போன்றவற்றை வைத்திருப்பவர்கள், இரண்டு மூன்று நாட்கள் வெளியூர் போவதாக இருந்தால், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது பெரிய சிக்கல்.
நீரின்றி செடிகள் வாடிவிடும். இந்த சிக்கலுக்குத் தீர்வாக, கொடிசியாவில் நடைபெற்று வரும் அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில், 'ஏஸ்.ஏ.பி.,' எனப்படும் 'சூப்பர் அப்சார்பன்ட் பாலிமர்' என்ற தூள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தூளை மிகக் குறைவான அளவுக்கு , செடிகள் இருக்கும் தொட்டியில் தூவி, அதன் மீது மேலோட்டமாக மண்ணைப் பரப்பி விட்டால் போதும். ஊற்றப்படும் தண்ணீரை உறிஞ்சி வைத்துக் கொண்டு, மெதுவாக விடும்.
ஒரு கிராம் எஸ்.ஏ.பி., 250 கிராம் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. செடியின் தேவைக்கேற்ப தூளைப் பரப்பிக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை தண்ணீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டது.
இது, மண்ணுக்கும் கேடில்லை என்கின்றனர் 'இ' அரங்கில் இதைக் காட்சிப்படுத்தியுள்ள லிங்கா கெமிக்கல்ஸ். 18 மாதங்கள் வரை இது பயன்பாட்டில் இருக்கும் பிறகு, மண்ணோடு மண்ணாக மட்கி விடும் என்கின்றனர்.
வீடுகளில் பூச்செடி, சிறு அளவில் மாடித் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
-----------
பாசன, குடிநீர் குழாய்களில் உப்பு படிகிறதா?
மேக்னடிக் சால்ட் வாட்டர் கண்டிஷனர்
நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு, சொட்டு நீர், நுண்ணீர்ப் பாசனக் குழாய்களில் உப்பு அடைத்துக் கொள்வது பெரும் பிரச்னையாக இருக்கிறது. வீடுகளிலும் உப்புத் தண்ணீர் பயன்படுத்துபவர்களுக்கு குழாய்களில் உப்பு படிவது பிரச்னையாக இருக்கிறது. வாஷிங் மெஷின், ஹீட்டர், ஆர்.ஓ., என எல்லா கருவிகளும் பாதிக்கப்படுகின்றன.
இந்த இருவேறு தரப்புக்கும் 'சி' அரங்கில் மேக்னடிக் சால்ட் வாட்டர் கன்டிஷனர் தீர்வாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
'இந்த மேக்னடிக் சால்ட் வாட்டர் கண்டிஷனரை குழாயுடன் இணைத்து விட்டால், குழாய்களில் உப்பு படிவது தடுக்கப்படும். இது இயங்க மின்சாரம் தேவையில்லை. வீடுகளுக்கும் பயன்படுத்தலாம். உப்பை உடைத்துத் துகள்களாக்கி விடும். தண்ணீரில் உள்ள டி.டி.எஸ்., அளவைப் பொறுத்து, ஒரு கருவி 11,000 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.25,000 வரை ஆகும். ஆறு மாதங்கள் பயன்படுத்தி தீர்வு கிடைக்காவிட்டால் பணம் திரும்ப வழங்கப்படும்' என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.
டிரோன் பூச்சிக் கொல்லி தெளிப்பான்
விவசாய குழுக்களுக்கு நல்ல சாய்ஸ்
டிரோன்களின் வரவு விவசாயத் துறையில் பெரும் மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக பூச்சிக் கொல்லி தெளிப்பதற்கு, வழக்கமான ஸ்பிரேயர்களை விட மிகுந்த பலனளிப்பதாக உள்ளது.
அக்ரி இன்டெக்ஸ் ஹெச் அரங்கில், வேளாண் பயன்பாட்டுக்கான டிரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 6 ஏக்கர் பரப்புக்கும், ஒரு நாளில் அதிகபட்சம் 25 ஏக்கருக்கும் பூச்சிக் கொல்லி தெளிக்க முடியும்.
பேட்டரிகளால் இவை இயக்கப்படுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட பேட்டரிகளைப் பயன்படுத்தினால், தொடர்ந்து மாற்றி, மாற்றி இயக்கலாம்.
ஒவ்வொரு பயிருக்கும் தேவைப்படும் அளவுக்கு துல்லியமாக, பூச்சிக் கொல்லியைத் தெளிக்கலாம்.
இதை இயக்க, பயிற்சி அளிப்பதுடன், பைலட் லைசென்ஸ்க்கும் விற்பனை செய்யும் நிறுவனமே கட்டண அடிப்படையில் ஏற்பாடு செய்கிறது. 10ம் வகுப்பு படித்தவர்கள் இந்த உரிமம் பெற தகுதி பெற்றவர்கள்.
தனிப்பட்ட விவசாயிகளும் இதை வாங்கலாம். உழவர் உற்பத்தியாளர் சங்கம் போன்ற விவசாயிகள் சங்கங்களும் இணைந்து வாங்கி, தங்களுக்குள் பயன்படுத்திக் கொள்வதுடன், வாடகை அடிப்படையில் இயக்கி, வருவாயும் ஈட்ட முடியும். இதற்காக, வாடகை டாக்ஸிகளுக்கு இருப்பது போன்று, தனி செயலியும் உள்ளது.
கிராமப் பகுதிகளில் இளைஞர்கள் இதைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கான திட்டம், கடனுதவிகளையும் விற்பனை செய்யும் நிறுவனமே ஏற்பாடு செய்கிறது.
--------

