/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்ச்சமூகத்திற்கு வேளாண் வணிகம் புதிதல்ல; வேளாண் பல்கலை பதிவாளர் பேச்சு
/
தமிழ்ச்சமூகத்திற்கு வேளாண் வணிகம் புதிதல்ல; வேளாண் பல்கலை பதிவாளர் பேச்சு
தமிழ்ச்சமூகத்திற்கு வேளாண் வணிகம் புதிதல்ல; வேளாண் பல்கலை பதிவாளர் பேச்சு
தமிழ்ச்சமூகத்திற்கு வேளாண் வணிகம் புதிதல்ல; வேளாண் பல்கலை பதிவாளர் பேச்சு
ADDED : ஆக 06, 2024 11:16 PM

கோவை : கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான வேளாண் விளைபொருள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கருத்தரங்கு, கோவை வேளாண் பல்கலையில் நேற்று நடந்தது.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நடந்த கருத்தரங்குக்கு, தலைமை வகித்து கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
வேளாண் விளைபொருள் விற்பனையால், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே பயனடையாமல், விவசாயிகளுக்கு அதற்கான பலன் சென்றடைய வேண்டும். சரியான விலை, நல்ல லாபம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
அனைவருக்கும் உணவு என்பதைத் தாண்டி, உலக சந்தை தரமான, ஆரோக்கியமான உணவு என்பதை நோக்கி நகர்ந்துள்ளது.
இறைச்சி நுகர்வு மட்டுமே பிரதானமாக இருந்த நிலையில், இதர உணவுகளுக்குமான தேவை அதிகரித்து, வீகன், ஆர்கானிக் என உணவுக் கலாசாரத்தில் பன்முகத்தன்மை உருவாகியுள்ளது.
இந்த வாய்ப்பை குறு, சிறு விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள, இதுபோன்ற கருத்தரங்குகள் உதவும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
வேளாண் பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன் பேசியதாவது:
2ம் நூற்றாண்டு, தமிழகத்துக்கும் ரோமானியர்களுக்கும் வர்த்தக தொடர்பு இருந்துள்ளது.
சீனர்களுடனும் வர்த்தக உறவு இருந்துள்ளது. தமிழ்ச்சமூகத்திற்கு வேளாண் வணிகம் புதிதல்ல. சமீபகாலத்தில் சற்று பின்தங்கி விட்டோம். மீண்டும் உயிர்ப்பிப்போம்.
விளைபொருளுக்கு, தாங்களே விலை நிர்ணயம் செய்யும்போதுதான் விவசாயிக்கு உரிய லாபம் கிடைக்கும். 2022ம் ஆண்டு அறிக்கையின்படி, ஏற்றுமதிக்கு உகந்த மாநிலக் குறியீட்டில் (இ.பி.ஐ.,) தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
வேளாண் பல்கலையில், கல்லூரி, ஆய்வு மையங்கள், கே.வி.கே., என, 112 அலகுகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஓர் உழவர் உற்பத்தி மையத்தைத் தத்தெடுத்துள்ளன. நாட்டிலேயே முன்மாதிரியாக இதைச் செயல்படுத்தி, உழவர் உற்பத்தி மையங்களுக்கு இடையில் இணைப்பை உருவாக்கி செயல்படுகிறோம்.
வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம், வேளாண் தொழில்நுட்ப வணிக காப்பகம் போன்றவற்றின் வாயிலாக, வேளாண் வணிகத்தை ஊக்குவித்து வருகிறோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடாசலம், துணை இயக்குனர்கள் மீனாம்பிகை, கிருஷ்ணமூர்த்தி (நீலகிரி), மகாதேவன் (ஈரோடு) உட்பட வேளாண் துறை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.