/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் வளர்ச்சி திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
/
வேளாண் வளர்ச்சி திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 03, 2024 05:56 AM
ஆனைமலை: ஆனைமலை வட்டாரத்தில், 2024 - 25வது நிதியாண்டில் தாத்துார், சுப்பேகவுண்டன்புதுார், அங்கலக்குறிச்சி, கம்பாலப்பட்டி கிராமங்களில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கிராமங்களில், இரண்டு ஆண்டுகளாக தரிசாக உள்ள நிலங்களை சாகுபடிக்கு ஏற்றதாக பண்படுத்த விரும்பும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 3,850 ரூபாய் மானிய உதவி வழங்கப்படும். இதில், 55 ஏக்கர் அனைத்து விவசாயிகளுக்கும், 12 ஏக்கர் ஆதிதிராவிட விவசாயிகளுக்கும் இலக்கு பெறப்பட்டுள்ளது.
சோளம், நிலக்கடலை பயிர்களில் வரப்பு பயிராக தட்டை பயிர் வளர்ப்பதை ஊக்குவிப்பதற்காக, தட்டை பயறு சான்று விதை ஏக்கருக்கு, 2 கிலோ, 320 ஏக்கருக்கு வழங்கப்படுகிறது.
வேளாண் பயிர்களில் திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஷ், பாக்டீரியா, சிங்க் பாக்டீரியா, உயிர் பூஞ்சாண கொல்லிகளான டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனஸ் ஆகியவற்றின் பயன்பாட்டை விவசாயிகளிடம் அதிகரிக்க, ஒரு விவசாயிக்கு மானியத்தொகை, 1,500 ரூபாய் வீதம், 90 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
பயறு வகை பயிர்களில் இரண்டு சத டி.ஏ.பி., கரைசல் மற்றும் அங்கக பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க மின்கலத்தெளிப்பான்கள், 3,000 ரூபாய் மானியத்தில், 24 பேருக்கு வழங்கப்படுகிறது.
சிறு, குறு பெண் மற்றும் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆர்வம் உள்ள விவசாயிகள், கோட்டூர், ஆனைமலை வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம், என, வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்தார்.