/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை உழவு, விதைக்கு வேளாண்துறை மானியம்
/
கோடை உழவு, விதைக்கு வேளாண்துறை மானியம்
ADDED : மே 28, 2024 11:35 PM
ஆனைமலை;கோடை உழவு, விதை வினியோக மானியம் வேளாண்துறை வாயிலாக வழங்கப்படுகிறது.
ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், வெயிலின் தாக்கம் குறைந்து, கடந்த சில வாரங்களாக மழை பெய்கிறது. போதியளவு மழைப்பொழிவு கை கொடுத்ததால், நிலங்களை உழவு செய்து பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் தயார்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், உழவு, விதை வினியோக மானியம் வழங்குவதாக வேளாண்துறை அறிவித்துள்ளது.
ஆனைமலை வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:
ஆனைமலையில் சித்திரை பட்ட கோடைமழை சராசரியாக, 300 மி.மீ., பெய்துள்ளது. முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தில், கோடை உழவு, விதை வினியோக மானியம், ஏக்கருக்கு, 1,200 ரூபாய் அரசு வேளாண் துறையால் வழங்கப்பட உள்ளது.
தற்போது, ஆனைமலை, கோட்டூர் பகுதிக்கு தலா, 125 ஏக்கர் இலக்கு பெறப்பட்டுள்ளது. உழவு மேற்கொண்டு சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள்,வேளாண் அலுவலக உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். உழவன் செயலியில் பதிவு செய்தும் பயன் பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.