/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை விமானநிலைய விரிவாக்கம் விரைவில் துவங்கும்; கையகப்படுத்தும் பணி 97 சதவீதம் 'ஓவர்'
/
கோவை விமானநிலைய விரிவாக்கம் விரைவில் துவங்கும்; கையகப்படுத்தும் பணி 97 சதவீதம் 'ஓவர்'
கோவை விமானநிலைய விரிவாக்கம் விரைவில் துவங்கும்; கையகப்படுத்தும் பணி 97 சதவீதம் 'ஓவர்'
கோவை விமானநிலைய விரிவாக்கம் விரைவில் துவங்கும்; கையகப்படுத்தும் பணி 97 சதவீதம் 'ஓவர்'
UPDATED : ஆக 15, 2024 05:19 AM
ADDED : ஆக 14, 2024 09:01 PM

கோவை : விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி, 97 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது; மீதமுள்ள 3 சதவீதமும் இரண்டு வாரத்தில் முடியும். விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கும், என, மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார் தெரிவித்தார்.
கோவை விமான நிலைய ஆலோசனை கமிட்டி கூட்டம், எம்.பி.,ராஜ்குமார் முன்னிலையில் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:
விமான நிலையம் தற்போது முழு கொள்ளளவில் இயங்கி வருகிறது. விரிவாக்கம் மிகவும் அவசியமாக உள்ளது. மொத்தம் 627 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதில், 97 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 3 சதவீதமும் அடுத்த இரண்டு வாரங்களில் முடிந்து விடும்.
460 ஏக்கர் பட்டா நிலமாக உள்ளது. ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் வேலைகளை மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. முழுமையான ஒப்படைப்பு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
விரிவாக்கத்தின்போது, இருகூர் -- சின்னியம்பாளையம் ரோடு தடைபடும் பிரச்னை உள்ளது. இதற்கென கூடுதலாக நிலம் எடுக்கப்படும். இதற்கு சர்வீஸ் ரோடு போட வேண்டும். குப்பை கையாளும் பணிகளில் சிக்கல் உள்ளது. இதற்கான தீர்வு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வேலையை மேற்கொள்வது குறித்தும், விமானநிலைய நிலம் ஒப்படைப்பு குறித்தும் விமான நிலைய ஆணையம் ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளது. இது, அரசின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக தெளிவு கிடைத்தால், விரைவில் பணிகள் துவங்கும்.
விமான நிலைய விரிவாக்கத்துக்கு 2100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நிலம் கையகப்படுத்துவதற்கான நிதி கொடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு, ஆட்டோக்களில் வந்து பயணிகளை இறக்கி விடுவதில், எவ்வித தடையும் இல்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.