/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் நிரம்பி ததும்புகிறது அக்காமலை செக்டேம்
/
நீர் நிரம்பி ததும்புகிறது அக்காமலை செக்டேம்
ADDED : ஆக 06, 2024 09:54 PM

வால்பாறை : வால்பாறை அருகே, அக்காமலை தடுப்பணை கடந்த இரண்டு மாதமாக நீர் நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறை நகரில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வால்பாறையில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் உள்ள அக்காமலை தடுப்பணையிலிருந்து, குழாய் அமைத்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்கிறது.அக்காமலை, கருமலை பகுதியில் பெய்யும் கனமழையினால், வால்பாறை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும், அக்காமலை தடுப்பணை கடந்த ஜூன் மாதம் இறுதியில் நிரம்பியது.
கருமலை இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அக்காமலை தடுப்பணை இரண்டு மாதமாக, நீர் நிரம்பிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால், வால்பாறை நகர் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மலைச்சரிவில் இயற்கையாக வரும் மழை நீரை சேமித்து, வால்பாறை நகர் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அக்காமலை தடுப்பணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால், இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை,' என்றனர்.