/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
350 அதிகாரிகளுக்கு மனைகள் ஒதுக்கீடு; கர்நாடகாவில் மேலும் ஒரு முறைகேடு
/
350 அதிகாரிகளுக்கு மனைகள் ஒதுக்கீடு; கர்நாடகாவில் மேலும் ஒரு முறைகேடு
350 அதிகாரிகளுக்கு மனைகள் ஒதுக்கீடு; கர்நாடகாவில் மேலும் ஒரு முறைகேடு
350 அதிகாரிகளுக்கு மனைகள் ஒதுக்கீடு; கர்நாடகாவில் மேலும் ஒரு முறைகேடு
ADDED : செப் 11, 2024 04:51 AM

பெங்களூரு: கர்நாடகாவில், 'மூடா' சார்பில், 350க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு முறைகேடாக மனைகள் ஒதுக்கியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, 18 அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, லோக் ஆயுக்தா நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம், சித்தராமையாவின் மனைவிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கியது. இது, மாநில அரசியலில் பெரும் சூறாவளியை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், 'மூடா' சார்பில் 350க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் முக்கிய புள்ளிகளுக்கு முறைகேடாக மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, சமூக ஆர்வலர் கங்கராஜு என்பவர், 2017ல், அப்போதைய ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு படையில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து, 2022ல் அரசு அனுமதி பெற்று, ஏ.சி.பி., வழக்கு பதிவு செய்தது. ஆனால், அதே ஆண்டு ஏ.சி.பி., ரத்து செய்யப்பட்டது. ஏ.சி.பி.,யில் பதிவான அனைத்து வழக்குகளும், லோக் ஆயுக்தாவுக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கில், லோக் ஆயுக்தா போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில், மைசூரின் ஹிண்கல் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சர்வே எண்: 89ல், 7.18 ஏக்கர் நிலத்தில், 350க்கும் அதிகமான மனைகள் பலருக்கு முறைகேடாக ஒதுக்கியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, 2017ல் மூடாவில் பணிபுரிந்த 18 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்கும்படியும், 'கெடு' விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தில், ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று 1996 - 97ல் ஹிண்கல் கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏழைகளுக்கு வழங்காமல் போலி ஆவணங்களை தயாரித்து, செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள், தபால் ஊழியர்கள், பஞ்., தலைவர்கள், துணை தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார்தாரர் கங்கராஜு குற்றஞ்சாட்டி உள்ளார்.

