ADDED : செப் 15, 2024 11:55 PM
கோவை : முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளான நேற்று தி.மு.க.,வினர் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காந்திபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயலாளர் கார்த்திக், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக, வெள்ளை புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
அ.தி.மு.க.,
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி ரோட்டில் உள்ள அண்ணாதுரை, சிலைக்கு, முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தே.மு.தி.க., மாநில இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரனும் அ.தி.மு.க.,வினருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தொடர்ந்து, அ.தி.மு.க., அலுவலகத்தில் கட்சிக்கொடி ஏற்றிய வேலுமணி, அங்கிருந்த அண்ணாதுரை படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயராமன், அம்மன் அர்ச்சுனன், முன்னாள் மேயர் செ.மா.வேலுசாமி உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.