/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணாமலை குற்றச்சாட்டு எதிரொலி :சுற்றுச்சூழல் பக்கம் தி.மு.க., கவனம்
/
அண்ணாமலை குற்றச்சாட்டு எதிரொலி :சுற்றுச்சூழல் பக்கம் தி.மு.க., கவனம்
அண்ணாமலை குற்றச்சாட்டு எதிரொலி :சுற்றுச்சூழல் பக்கம் தி.மு.க., கவனம்
அண்ணாமலை குற்றச்சாட்டு எதிரொலி :சுற்றுச்சூழல் பக்கம் தி.மு.க., கவனம்
ADDED : ஏப் 17, 2024 12:43 AM
தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுவது, தி.மு.க., - அ.தி.மு.க., என இரு திராவிட கட்சிகளுக்கும் பெரும் தலைவலியாக இருக்கிறது. இவ்விரு கட்சிகளும் இணைந்து அவருக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றன. இருப்பினும், தேர்தல் பரப்புரையின்போது, தனது கருத்தை மிகவும் ஆழமாக, ஆணித்தரமாக எடுத்துரைத்து வருகின்றார்.
மிக முக்கியமாக, நொய்யல் ஆற்றை சீரமைக்க வழங்கிய நிதியில் முறைகேடு செய்யப்பட்டு இருக்கிறது; கவுசிகா நதியை மீட்டெடுக்க வேண்டும். கிளை நதிகளை காணவில்லை. கோவையின் வெப்பம் மூன்று டிகிரி வரை அதிகரித்திருக்கிறது. பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை காக்க தவறி விட்டனர் என, அண்ணாமலை பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இது நுாற்றுக்கு நுாறு சதவீதம் உண்மை. கோவை எப்போதும் குளுகுளுவென இருக்கும். சமீபகாலமாக வெப்பம் வாட்டுகிறது. இதற்கு காரணம் பசுமை பரப்பை அதிகரிக்காததே. அண்ணாமலையின் குரல் ஓங்கி ஒலித்த பிறகே, சுற்றுச்சூழல் பக்கம் தி.மு.க., கவனம் திரும்பியது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்பு நிர்வாகிகளையும் தி.மு.க., தேர்தல் பணிமனைக்கு அவசர அவசரமாக அழைத்தனர். அவர்களிடம், தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்தாய்வு நடத்தினார். சூழல் ஆர்வலர்கள் ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்டு, குறிப்பெடுத்த அவர், 'சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்க உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும். நொய்யல் ஆற்றை புதுப்பிக்க சிறப்பு கூட்டம் நடத்தப்படும்' என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி, அவர்களை சமாதானம் செய்தார்.
இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முயற்சியில், சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொழில்துறையை சேர்ந்தவர்களை, திருப்பூருக்கு வரவழைத்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, நேரில் முறையிடுவதற்கு ஏற்பாடு செய்தனர். அவரும் அனைவரிடமும் வழக்கம்போல் மனுக்களை பெற்றுக் கொண்டார். அவற்றுக்கெல்லாம் தீர்வு கிடைக்குமா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
ஏனெனில், 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்தில், நொய்யல் ஆறு சேர்க்கப்பட்டிருக்கிறது; இதில், கான்கிரீட் கட்டுமானங்கள் கட்டுவதற்கே தற்போதைய தி.மு.க., அரசு திட்டமிட்டு வருகிறது. அதனால், சூழல் ஆர்வலர்கள் பலரும், 'கல்லெறிந்து பார்க்கிறோம்; பழம் விழுகிறதா அல்லது நம் தலையில் கல்லே மீண்டும் விழுகிறதா என பார்க்கலாம்' என்கின்றனர்

