/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவிநாசியில் 'பிள்ளையார் சுழி' போட்ட அண்ணாமலை!
/
அவிநாசியில் 'பிள்ளையார் சுழி' போட்ட அண்ணாமலை!
ADDED : ஏப் 03, 2024 10:58 PM

கடந்த, 2020, அக்., 31. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், பா.ஜ.,வின் நகர அலுவலக திறப்பு விழாவில் தற்போதைய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
''அவிநாசிக்கு, வாசியில் காசி என்ற பெயர் உண்டு. புண்ணிய தலமான காசியில் பிறப்பதால் கிடைக்கும் புண்ணியம், அவிநாசியில் பிறப்பதாலும் கிடைக்கும் என்பதே அதன் அர்த்தம். காசியில் இருந்து எம்.பி.,யாகி இன்று, பிரதமராக மோடி உயர்ந்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில், அவிநாசியில் இருந்து பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்று, சட்டசபைக்கு செல்ல வேண்டும்; அதற்கான வேட்பாளரும் தயாராக உள்ளார். அதற்காக கட்சியினர் உழைக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார் அண்ணாமலை.
அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி
தமிழகத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத கோட்டையாக கருதப்படும் அவிநாசியில், அண்ணாமலையின் இந்த பேச்சு, அ.தி.மு.க.,வினரையே அதிர்ச்சியடைய வைத்தது.
அண்ணாமலையின் அந்த பேச்சு அதோடு நீர்த்து போய்விடவில்லை.
கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ., தங்களுக்கான தொகுதி பங்கீட்டில் அவிநாசி (தனி) சட்டசபை தொகுதியை வலுக்கட்டயாமாக கேட்டது; ஆனால், அவிநாசி அ.தி.மு.க.,வினர் இதை ஏற்கவில்லை; சபாநாயகரும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வுமாக இருந்த தனபால் உள்ளிட்ட கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள், 'மிக எளிதாக ஜெயிக்க கூடிய தொகுதியை விட்டுக் கொடுக்கவே முடியாது' என, கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க, ஒரே இரவில் நிலைமை மாறியது.'திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் முருகன் போட்டியிடுவார்' என, அக்கட்சித் தலைமை அறிவித்தது. 'அப்பாடா...' என, நிம்மதி பெருமூச்சுவிட்டனர் அவிநாசி அ.தி.மு.க.,வினர்; அ.தி.மு.க.,வினர் சொன்னபடியே, 2021 சட்டசபை தேர்தலில் மிக எளிதாக வெற்றி பெற்றார் தனபால்.
மத்திய அமைச்சரான முருகன்
அதே நேரம், தாராபுரம் தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே, சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., வேட்பாளர் கயல்விழியிடம் தோற்றார் முருகன்.
இருப்பினும், அவரை உற்சாகப்படுத்த, மத்திய இணையமைச்சர் பதவியை வழங்கி, ராஜ்ய சபா எம்.பி.,யாக்கினார் பிரதமர் மோடி. பின், கட்சியின் மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார் அண்ணாமலை. அதன் பிறகு தான், கொங்கு மண்டலத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சி வேகமெடுத்தது.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் 2022, ஜூலையில், 'தாமரை மாநாடு' நடத்தப்பட்டது; லட்சக்கணக்கில் தொண்டர்கள் திரண்டனர். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட 'என் மண்; என் மக்கள்' நடைபயணத்தின் நிறைவு விழா, கடந்த, பிப்., 21ல் பல்லடத்தில் நடந்தது; இதில், பிரதமர் மோடி பங்கேற்றார். இதிலும், லட்சக்கணக்கானோர் திரண்டு, பிற கட்சிகளை மிரள வைத்தனர்.
இவ்வாறு, கொங்கு மண்டலத்தில் பா.ஜ., வேகமாக வளர, அவிநாசி தொகுதியில் தான் பிள்ளையார் சுழி போடப்பட்டது என்பது மிகையல்ல. இன்று, நீலகிரி பா.ஜ., வேட்பாளர் முருகன், அவிநாசி ஒன்றிய பகுதியில் ஓட்டு சேகரிக்க உள்ள நிலையில், இம்முறை தேர்தலில், நீலகிரி லோக்சபா தொகுதியின் வெற்றிக்கு, அவிநாசி தொகுதி எந்தளவு கைக் கொடுக்கப் போகிறது என்பது, ஜூன், 4ல் தெரியும்.

