/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்தும் முறை
/
நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்தும் முறை
ADDED : ஆக 22, 2024 02:21 AM
பெ.நா.பாளையம், : விவசாயிகள், நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்தும் முறை குறித்து, வேளாண்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
விதை நேர்த்தி செய்யும்போது, ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை ஒரு கிலோ திட வடிவம் அல்லது, 125 மில்லி லிட்டர் திரவ வடிவம் அளவுள்ள நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா மற்றும் துத்தநாக பாக்டீரியா ஆகியவற்றை அரிசி கஞ்சியுடன் கலந்து அனைத்து விதைகளிலும், பரவும் வண்ணம் விதை நேர்த்தி செய்து, 30 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
நாற்று நனைத்தல் என்பது பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் உரங்களை தலா ஒரு கிலோ திட வடிவம் அல்லது, 400 மில்லி லிட்டர் திரவ வடிவம் வயலில் சிறு பாத்தி அமைத்து, 40 லிட்டர் தண்ணீரில் கலந்து நாற்றுகளின் வேர் பகுதி நன்கு நனையும்படி, 30 நிமிடம் நனைத்து பின்பு நடவு செய்ய வேண்டும்.
மண்ணில் இடுதல் என்பது அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் பொட்டாஷ் பாக்டீரியா ஆகிய நுண்ணுயிர் உரங்களை தலா, 2 கிலோ திட வடிவம் அல்லது, 500 மில்லி லிட்டர் திரவ வடிவம் மற்றும், 25 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து, கடைசி உழவுக்கு முன்பு சீராக வயலில் இடவேண்டும். காலை வேலைகளில் தெளிப்பது சிறந்தது என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.