/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அருளானந்தர் ஆலய தேர்த்திருவிழா
/
அருளானந்தர் ஆலய தேர்த்திருவிழா
ADDED : பிப் 10, 2025 06:05 AM

கோவை, : ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலய தேர்த்திருவிழா நேற்று நடந்தது.
ஆர்.எஸ்.புரம், லாலி ரோட்டில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தின் ஜூபிலி ஆண்டை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.
தொடர்ந்து, கடந்த 5ம் தேதி 'இறைவார்த்தையை வாழ்வாக்கிய புனித அருளானந்தர்' என்ற தலைப்பில் மறையுரை, திருப்பலி; 6ம் தேதி 'உண்மையை உரக்க சொல்லும் புனித அருளானந்தர்' என்ற தலைப்பில் மறையுரை, திருப்பலி; 7ம் தேதி 'நலம் தரும் செம்மண் புனிதர்' என்ற தலைப்பில் மறையுரை, திருப்பலி நடைபெற்றது.
இதையடுத்து நேற்று காலை, கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் கூட்டு திருப்பலியும், புதுநன்மை, உறுதிப்பூசுதல் அருட்சாதனம் நிகழ்வு நடந்தது. மாலை, கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் தேர்த்திருவிழா திருப்பலி நடந்தது. அதில் மறைமாவட்ட குருக்கள் பங்கேற்றனர். திருப்பலிக்கு பிறகு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேரில் புனித அருளானந்தர் வைக்கப்பட்டு, ஆலயத்திற்கு அருகில் உள்ள வீதிகளில் பவனியாகக் கொண்டு செல்லப்பட்டார்.
திருவிழா ஏற்பாடுகளை, புனித அருளானந்தர் ஆலய பங்குத்தந்தை ததேயுஸ் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை கரோலின் சிபு, அருட்சகோதரிகள், அன்பியங்கள் மற்றும் பல்வேறு சபைகளின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

