/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பதினாறு வயதினிலே! பஸ் கண்டக்டரான சிறுவன்; மடக்கிப்பிடித்த போலீசார்
/
பதினாறு வயதினிலே! பஸ் கண்டக்டரான சிறுவன்; மடக்கிப்பிடித்த போலீசார்
பதினாறு வயதினிலே! பஸ் கண்டக்டரான சிறுவன்; மடக்கிப்பிடித்த போலீசார்
பதினாறு வயதினிலே! பஸ் கண்டக்டரான சிறுவன்; மடக்கிப்பிடித்த போலீசார்
ADDED : ஆக 14, 2024 09:06 PM

கோவை : அடிக்கடி விபத்து ஏற்படுத்துவது, காதை பிளக்கும் ஒலியுடன் பாட்டு போடுவது, பல முறை எச்சரித்தும் ஏர் ஹாரன் பயன்படுத்துவது... உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு, தனியார் பஸ்கள் உள்ளாவதில் ஆச்சரியம் இல்லை. இந்த பஸ்கள் சிலவற்றில் அனுபவமற்ற, தகுதியற்ற, வயது முதிர்ச்சியற்றவர்களை பணிக்கு பயன்படுத்துவதே காரணம். தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்த 16 வயது சிறுவன், நேற்று போலீசாரிடம் சிக்கியதில், இது உறுதிப்படுத்தப்பட்டது.
வடவள்ளியிலிருந்து ஒண்டிப்புதுார் வரை காந்திபுரம் வழியாக சங்கீதா என்ற பெயரில், '1 ஏ' என்ற தனியார் பஸ் இயங்கி வருகிறது.
இந்த பஸ்சில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, புகார் வந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணையில் இறங்க திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று வடவள்ளியிலிருந்து காந்திபுரம் வந்த பஸ்சில், நிறைய பயணிகள் இருந்தனர். அவ்வழியே சென்ற போலீஸ் எஸ்.ஐ., ஜெயக்குமார் மற்றும் போலீஸ்காரர் முரளிதரன் ஆகிய இருவரும் விசாரித்தனர். அதில், பஸ் கண்டக்டராக இருந்தவர், 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு, வேறு பஸ்சுக்கு மாற்றப்பட்டனர்.
டிரைவர் மற்றும் பஸ் உரிமையாளரை அழைத்த போலீசார், முறையாக லைசென்ஸ் பெற்ற, அனுபவம் வாய்ந்த கண்டக்டர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இது குறித்து, கோவை சரக போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் சிவக்குமரன் கூறியதாவது:
போக்குவரத்துத் துறை சார்பில், பஸ் டிரைவரிடம் சோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பஸ் பர்மிட்டின் மீது, நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும்.
18 வயது பூர்த்தியடையாதவர்களை, பணியில் அமர்த்துவது குற்றம். கண்டக்டர்களுக்கான முதலுதவி பயிற்சியோ, லைசென்சோ பெறாமல் பணியமர்த்தியதும் குற்றம். அதற்கு பஸ் உரிமையாளர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது போன்ற கண்டக்டர்கள், டிரைவர்கள் பணியமர்த்தப்படுவதால் தான் விபத்துக்களும் உயிர்பலிகளும் ஏற்படுகின்றன. அதனால் தனியார் பஸ்களில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், திடீர் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.