/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
/
அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
ADDED : செப் 13, 2024 10:27 PM

பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளி, அரசு மருத்துவமனையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கோவை சுந்தராபுரம் அபிராமி செவிலியர் கல்லுாரி மாணவர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஊழியர்கள் சார்பில், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி, செவிலியர் கல்லுாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், பண்டிகையையொட்டி பூக்கோலம் இட்டு கொண்டாடப்பட்டது.
* பொள்ளாச்சி கயிறு வாரிய மண்டல அலுவலகத்தில் அத்தப்பூ கோலமிட்டு, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மண்டல அலுவலர் சாபு தலைமையில் அனைத்து பணியாளர்கள் பங்கேற்றனர்.
* ஆர்.கோபாலபுரம் எம்.எம்.எஸ்., பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் மனோகரன், செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் பிரியவீனா, முதல்வர் கிரிஜா ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர்.மாணவ, மாணவியர், பூக்கோலமிட்டனர்.
மேலும், பண்டிகையையொட்டி ஓணம் பாட்டு, திருவாதிரை கதகளி, மோகினியாட்டம், நாட்டுப்புற நடனம் போன்ற கேரள பாரம்பரிய நடனங்களும், மாணவர்களின் புலியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து ஓணம் பண்டிகை குறித்த நாடகத்தில், மாணவர்கள், மகாபலி, வாமணன், விஷ்ணு ஆகிய வேடமணிந்து நடித்தனர்.
* பூசாரிப்பட்டியிலுள்ள, பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரியில், மாணவ, மாணவியர் பூக்கோலமிட்டும், மாகாபலி ஊர்வலம், செண்டை மேளம் வாசித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். கல்வி சார் தாளாளர் சிவானி கிருத்திகா, கல்லுாரி முதல்வர் கண்ணன் பங்கேற்றனர். தமிழ்துறை உதவி பேராசிரியர் மேனகா, விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேலும், தாளம் திருவாதிரைக்களி பாலக்காடு மாவட்ட செயலாளர் ராமதாஸ், கேரள சமாஜம் பூக்கோல நிகழ்வின் தலைவர் கோசி, வனிதா விங் அமைப்பின் செயலர் அஞ்சு சீனு ஆகியோர் பங்கேற்று, ஓணம் பண்டிகை குறித்து பேசினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
* எஸ்.மேட்டுப்பாளையம் யுவகுரு கலை கல்லுாரியில், மாணவர்களுடன் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர். கல்லுாரி தாளாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் கேரள பாரம்பரிய உடை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். கல்லுாரி முதல்வர், ஓணம் பண்டிகையின் சிறப்பு குறித்து விளக்கிப் பேசினார். மாணவி புவனேஸ்வரி நன்றி கூறினார்.
உடுமலை
* உடுமலை, ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி முதல்வர் மாலா ஓணம் விழாவை துவக்கி வைத்து பேசினார். மழலையர் பிரிவு மாணவர்கள், கேரள பாரம்பரிய முறைப்படி வேடமிட்டு கொண்டாடினர்.
பள்ளி வளாகத்தில் பூக்கோலமிட்டு, மாணவர்கள் நடனம், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். விழாவை ஒருங்கிணைத்த ஆசிரியர்களுக்கு, ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் பாராட்டு தெரிவித்தனர்.
* கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் ஓணம் பூக்கோலமிட்டனர். ஓணம் பண்டிகை குறித்து, ஆசிரியர் வசந்தா பேசினார். மாணவர்களுக்கு பூக்கோல போட்டி நடந்தது. போட்டியில் இமயம் அணியினர் முதலிடத்திலும், நீலகிரி அணி இரண்டாமிடத்திலும், விந்தியா மற்றும் மகேந்திரகிரி அணிகள் மூன்றாமிடத்தில் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- நிருபர் குழு -