/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவுநீராக மாறும் அத்திக்கடவு நீர் அன்னுார் குளத்தில் அவலம்
/
கழிவுநீராக மாறும் அத்திக்கடவு நீர் அன்னுார் குளத்தில் அவலம்
கழிவுநீராக மாறும் அத்திக்கடவு நீர் அன்னுார் குளத்தில் அவலம்
கழிவுநீராக மாறும் அத்திக்கடவு நீர் அன்னுார் குளத்தில் அவலம்
ADDED : செப் 07, 2024 02:39 AM

அன்னூர்:அன்னூர் குளத்தில் அத்திக்கடவு நீருடன் சாக்கடை கழிவுநீர் கலக்கிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கடந்த 17ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. கடந்த 18 மாதங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அன்னூரில் உள்ள, 119 ஏக்கர் பரப்பளவு குளத்தில் 50க்கும் மேற்பட்ட முறை சோதனை ஓட்டத்தில் தண்ணீர் விடப்பட்டது. மழை நீர் மற்றும் அத்திக்கடவு நீரால் குளத்தில், 60 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது.
எனினும் குளத்தின் கிழக்குப் பகுதியில் பெரிய அளவில் சிமென்ட் குழாய் பதிக்கப்பட்டு, மேட்டுப்பாளையம் ரோடு, மெயின் ரோடு மற்றும் கோவை ரோட்டில் இருந்து வரும் கழிவு நீர் குளத்தில் கலக்கிறது.
இத்துடன் குளத்தின் வடக்கு பகுதியில் தினமும் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் குளத்தில் ஆகாயத்தாமரை 50 சதவீதம் பரவி விட்டது. குளத்தில் உள்ள நீர் துர்நாற்றம் வீசுகிறது.
விவசாயிகள் கூறுகையில், '60 ஆண்டுகளாக காத்திருந்து அத்திக்கடவு நீர் தற்போது அன்னூர் குளத்திற்கு வந்தும் பயனில்லாமல் உள்ளது. குளத்தில் சாக்கடை நீருடன் கலந்து அத்திக்கடவு நீரும் கழிவுநீராக மாறிவிட்டது. இதனால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. கழிவு நீரை சுத்திகரிக்க வேண்டும். குளத்தில் கலப்பதை தடுக்க வேண்டும்' என்றனர்.