/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை கட்டளைதாரர்களை வெளியேற்ற முயற்சி
/
மருதமலை கட்டளைதாரர்களை வெளியேற்ற முயற்சி
ADDED : செப் 07, 2024 05:51 AM

கோவை: கோவை மருதமலை கோவிலில் பரம்பரை பரம்பரையாக பூஜை செய்து வரும் கட்டளைதாரர்களை வெளியேற்றி விட்டு, புதியவர்களை சேர்க்க முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் மருதமலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில், முருக பக்தர்களால் ஏழாம் வீடாக போற்றப்படுகிறது. தைப்பூசம், சஷ்டித்திருவிழா, கார்த்திகை தீபம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள், வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
ஒவ்வொரு விழாக்களின் போதும், பரம்பரை கட்டளைதாரர்கள், அன்றைய தின பூஜைகளை முன்னெடுத்து நடத்துவர். அவர்களது செலவில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, மரியாதை அளிக்கப்படும். இந்நடைமுறை காலங்காலமாக பின்பற்றப்படுகிறது. இவ்வகையில், 25க்கும் மேற்பட்ட கட்டளைதாரர்கள் உள்ளனர்.
உதாரணத்துக்கு, தைப்பூச திருவிழா, 10 நாட்கள் நடைபெறும்; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டளைதாரர்கள் தலைமையில் பூஜை நடக்கும்; அதற்குரிய செலவை அவர்களே ஏற்பர். இச்சூழலில், கட்டளைதாரர்களில் சிலரை வெளியேற்றி விட்டு, கோவையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரை இணைக்க முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது, பரம்பரை பரம்பரையாக பூஜை செய்து வரும் கட்டளைதாரர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து, வடவள்ளி கட்டளைதாரர்கள் கூறியதாவது:
மருதமலை முருகனுக்கு, பரம்பரை பரம்பரையாக நாங்கள் செய்து வரும் கட்டளையை தொடர வேண்டுமெனில், இரண்டு லட்சம் ரூபாய் இந்து சமய அறநிலையத்துறைக்குச் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என கூறினர். அத்தொகையை செலுத்த தயாராக இருப்பதாக, கோவில் நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்திருக்கிறோம்.
அறங்காவலர் குழுவுக்கு ஒவ்வொரு கட்டளைதாரரும் தலா, 10 லட்சம் ரூபாய் தனியாக வழங்க வேண்டும் என கேட்பது எவ்விதத்தில் நியாயம். முடியாவிட்டால், கட்டளைதாரர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்; கோவையை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கட்டளைதாரர்களாக இணைய தயாராக இருக்கின்றனர் என கூறுகின்றனர்.
முருகனுக்கு திருப்பணி செய்ய தயாராக இருக்கிறோம்; தனிப்பட்ட நபர்களுக்கு பணம் கொடுத்து, மரியாதை பெற வேண்டுமா. எங்களது பரம்பரை உரிமையை எப்படி விட்டுக் கொடுக்க முடியும். அதனால், பொறுப்பு அமைச்சர் முத்துசாமியை சந்தித்து பேசினோம். அவர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் கூறுகையில், ''புதிய கட்டளைதாரர்களை சேர்க்க, ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அதற்குரிய தொகை எவ்வளவு என்பதை, மருதமலை கோவிலில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அறங்காவலர் குழுவினர் பணம் கேட்பதாக, எந்த புகாரும் வரவில்லை. புகார் கொடுத்தால் விசாரிக்கிறேன்,'' என்றார்.
மருதமலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ''இது, தவறான விஷயம். தவறு செய்திருந்தால், யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். எங்களுக்காக கோவிலில் எந்த மரியாதையும் எதிர்பார்ப்பதில்லை. யாரோ ஒருவர் தவறு செய்திருப்பதால், அமைச்சரிடம் கட்சி நிர்வாகிகள் அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஏதோ ஓரிடத்தில் தவறு நடந்திருக்கிறது என நினைக்கிறேன்,'' என்றார்.