/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மக்களுடன் முதல்வர்' முகாமில் அவதி
/
'மக்களுடன் முதல்வர்' முகாமில் அவதி
ADDED : ஆக 22, 2024 12:22 AM

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.
நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு ஜீவகாருண்யா சேவா ஆசிரமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இங்கு, வருவாய், வேளாண், முதியோர் உதவித்தொகை, தெரு விளக்கு, கலைஞரின் கனவு இல்லம், வீட்டு வசதி, மதுவிலக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில், பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெற தனித்தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உடனடியாக மனு ரசீதுகள் வழங்கப்பட்டன. முகாமில், 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர்.
நாயக்கன்பாளையம், பாலமலை ரோட்டில் இருந்து தெற்கு பக்கமாக, சுமார், 100 அடி தூரத்தில் மக்களுடன் முதல்வர் நடக்கும் ஜீவகாருண்ய சேவா ஆசிரமம் இருக்கிறது. நேற்று காலை பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பெய்த மழையால், 100 அடி தூரமும் சேறும், சகதியமாக இருந்தது. முகாமில் பங்கேற்று, மனு கொடுக்க வந்த மக்கள் சாலையின் ஓரமாக, பெரும் சிரமத்துடன் நடந்து சென்றனர். இருசக்கர வாகனங்களில் வந்த சிலர், சகதியில் சிக்கி வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர்.
முகாமில் பங்கேற்க வந்த கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன், தி.மு.க., கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்டோர் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அதிகாரிகளை அழைத்து, இப்பகுதியில் உடனடியாக சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
இது குறித்து, நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திபிரியா சந்துருஜெகவி, துணைத் தலைவர் சின்னராஜ் ஆகியோர் கூறுகையில்,' குறிப்பிட்ட சாலை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்டது. இங்கு தார் சாலை அமைக்க பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. சாலை உள்ள பகுதிக்கு மேலே மின்சார டவருக்கான ஒயர்கள் செல்வதால், மின்சாரத் துறையிடமிருந்து தடையின்மை சான்று வாங்கி வந்தால் மட்டுமே, சாலை அமைக்க முடியும் என ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
இதனால் இப்பணி கிடப்பில் உள்ளது. இது குறித்து உரிய அதிகாரிகளுடன் கலந்து பேசி, சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.