/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பவானி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும்'
/
'பவானி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும்'
'பவானி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும்'
'பவானி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும்'
ADDED : மார் 29, 2024 12:27 AM

மேட்டுப்பாளையம்;குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், பவானி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என, கூடுதல் கலெக்டர் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், நெல்லித்துறையில் இருந்து, பவானிசாகர் அணையின் நீர் தேக்கப் பகுதி வரை, ஆற்றின் இரு பக்கம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் மோட்டார் மற்றும் ஆயில் மோட்டார் வாயிலாக, காலம் காலமாக விவசாயத்திற்கு தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
நெல்லித்துறையிலிருந்து சிறுமுகை வரை பவானி ஆற்றில் கோவை, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகள் உட்பட, 21 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.
தற்போது பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், குறிப்பாக மூளையூரில் பவானி ஆற்றில் அமைத்துள்ள, ஆறு ஊராட்சிகளின் கூட்டுக் குடிநீர் திட்ட, நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இதை அடுத்து காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அதிகாரிகள்,பவானி ஆற்று நீர்ப் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கூடுதல் கலெக்டர் சுவேதா சுமன் தலைமை வகித்தார். கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன், குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் சித்ரா, காரமடை பி.டி.ஓ., சந்திரா மற்றும் பவானி ஆற்று நீர்ப் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் திப்பையன், பொருளாளர் பழனிசாமி, மாதையன் மற்றும் சண்முகசுந்தரம் உள்பட ஏராளமான விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் தரப்பில், தற்போது வாழைகளில், தார் விடும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு விவசாயியும் கடன் பெற்று வாழை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் வாழைக்கு தண்ணீர் இல்லாமல் போனால், நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடன் சுமையால் பாதிக்கப்படுவர்.
எனவே ஆற்றில் வாரத்திற்கு நான்கு நாட்கள் விவசாயத்துக்கு தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு நாங்கள் தண்ணீர் எடுப்பதை நிறுத்தி விடுகிறோம் என கூறினர்.
விவசாயிகளின் கோரிக்கையை கேட்ட கூடுதல் கலெக்டர் சுவேதா சுமன் பேசுகையில்,குடிநீருக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எனவே பவானி ஆற்றில், சிறுமுகை அருகே மூளையூரில் உள்ள, ஆறு ஊராட்சிகளின் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் முழுமையாக செல்லும் வரை, ஆற்றில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்களுடைய கோரிக்கைக்கு, திங்கட்கிழமை பதில் அளிக்கப்படும், என்றார்.
இதை கேட்ட விவசாயிகள், விவசாயம் பாதிக்காத வகையில், நல்ல முடிவை அறிவிக்கும் படி கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையில், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் பிறப்பித்துள்ள உத்தரவில், கோடைகாலத்தையொட்டி குடிநீருக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், குடிநீருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தொழிற்சாலைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் அனுமதியை வருகிற ஜுன் மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

