/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுக்குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும்!
/
கூட்டுக்குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும்!
கூட்டுக்குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும்!
கூட்டுக்குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும்!
UPDATED : ஏப் 28, 2024 06:58 AM
ADDED : ஏப் 28, 2024 12:58 AM

குழந்தைகளுக்கான தனிப்பட்ட வாழ்க்கையில், எந்த எல்லை வரை தலையீடல் இருக்க வேண்டுமென்ற புரிதல் இருந்தாலே, கூட்டுக்குடும்பங்களில் விரிசல் வராது என்கிறார், மனநல ஆலோசகர் கவிதா.
வீட்டில் பெரியோர் இருப்பதுதான், மிகப்பெரிய சொத்து என்று கருதிய காலம் மலையேறிவிட்டது. இன்றைய மாடர்ன் மனைவிகள், தங்களின் மாமியார், மாமனாருடன், ஒரே வீட்டில் வசிக்க விரும்புவதில்லை.
நன்றாக படித்து கை நிறைய சம்பாதிக்கும் மகனோ, மகளோ, தங்களின் பெற்றோரை முதுமையில் கவனித்துக் கொள்ளாமல், தனித்து விடுகிறார்கள்.
முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பன போன்ற குற்றச்சாட்டுகள் எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு, முதியோர் செய்யும் சில தவறுகளாலும், குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது.
கூட்டு குடும்ப பந்தத்தை மேலும் வலுவாக்க, இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார், மனநல ஆலோசகர் கவிதா.
அவர் மேலும் கூறியதாவது:
தங்களின் குழந்தைகளுக்கு, உரிய வயதில், ஏற்ற துணையை தேடி திருமணம் செய்து வைக்கும் பெற்றோர், அவர்களுக்கான தனிப்பட்ட வாழ்க்கை இருப்பதை மறந்து விடுகிறார்கள்.
தாங்கள் பெற்ற அனுபவம், வாழ்ந்த காலம் வேறு என்பதை புரிந்து கொண்டாலே, தலைமுறை இடைவெளியில் உள்ள மாற்றங்களை, ஏற்றுக்கொள்ள முடியும்.
மூக்கை நுழைக்கக்கூடாது
அவுட்டிங் செல்வது, பார்ட்டி செல்வது, ஓட்டல் செல்வது தொடங்கி, பேரக்குழந்தைகளின் கல்வி,வளர்ப்பு முறை, உணவு தயாரிப்பு எல்லாவற்றிலும் அதிகாரம் செலுத்தக்கூடாது. சின்ன சின்ன விஷயங்களில், தலையிடாமல் இருந்தாலே, சண்டைகளை தவிர்க்கலாம்.
வயதானதால் தங்களின் ஆளுமை குறைந்து விட்டதாக பலரும் கருதுகின்றனர். இதனால் ஏற்படும் தேவையில்லாத பயம், பதட்டம், இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்து விடுகிறது.
ஒப்பிடுவது கூடாது
நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்போரின் வீடுகளில் நடக்கும் சம்பவங்களை, தங்களோடு தொடர்புப்படுத்தி கொள்வது, கூட்டுக்குடும்ப விரிசலுக்கு முதல்படியாக அமைகிறது. இதை தவிர்ப்பது நல்லது.
எதையும் திணிக்காமல், ஆலோசனையாக கூறி, தங்களின் எல்லையை புரிந்து நடந்து கொண்டாலே, பிரச்னைகள் ஏற்பட வழியில்லை.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

