/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
115 அடியை தொட்டது ஆழியாறு அணை: இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
/
115 அடியை தொட்டது ஆழியாறு அணை: இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
115 அடியை தொட்டது ஆழியாறு அணை: இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
115 அடியை தொட்டது ஆழியாறு அணை: இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : ஜூலை 24, 2024 12:47 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகேயுள்ள, ஆழியாறு அணை நீர்மட்டம், 115 அடியாக உயர்ந்ததையடுத்து, இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பி.ஏ.பி., பாசனத்தில், முக்கிய அணையான ஆழியாறு அணை, 76 சதுர மைல்கள் நீர்ப்பிடிப்பு பரப்பு கொண்டது. இந்த நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு, 3,864 மில்லியன் கன அடிகளாகும். மொத்தம், 120 அடி உயரம் கொண்ட அணையில், சேகரிக்கப்படும் தண்ணீர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும் குடிநீர், ஒப்பந்தப்படி கேரளாவுக்கு வினியோகிக்கப்படுகிறது.
கடந்தாண்டு, பருவமழை கை கொடுக்காததால் அணை நிரம்பவில்லை. இதனால், நிலை பயிர்களை காப்பாற்ற குறைந்தளவு நீர் மட்டுமே வழங்கப்பட்டது. இந்நிலையில் பருவமழை கை கொடுத்ததால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கடந்த, ஒரு வாரமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த, 16ம் தேதி 91 அடியாகவும், 18ம் தேதி 100 அடியாகவும் உயர்ந்தது. மொத்தம் உள்ள, 120 அடியில், 20ம் தேதி, 110 அடியாக உயர்ந்தது.
அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், நேற்று, 115.25 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. வினாடிக்கு, 2,234 கனஅடி நீர் வரத்து இருந்தது. இதையடுத்து, இறுதி கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கரையோர மக்கள் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆழியாறு அணையில், 120 அடியில், 110 அடியை எட்டியதையடுத்து முதல்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அணை நீர்மட்டம், 115 அடிக்கு உயர்ந்ததும், இரண்டாம் கட்ட மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் அணை நிரம்ப, 5 அடி மட்டுமே உள்ளது. எனவே, அணைக்கு நீர் வரத்து அதிகரித்தால் அணை பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக நீர் திறக்க வாய்ப்புள்ளது. மக்கள் ஆற்றுப்படுகைக்கு செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆற்று நீரில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.