/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பச்சிளங்குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கக் கூடாது!
/
பச்சிளங்குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கக் கூடாது!
பச்சிளங்குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கக் கூடாது!
பச்சிளங்குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கக் கூடாது!
ADDED : ஏப் 29, 2024 11:49 PM

கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பச்சிளங்குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா? கூடாதா...?
'என்னங்க இது கேள்வி....இந்த வெயிலில் நமக்கே இவ்வளவு தாகம் எடுக்கிறதே. குழந்தைகள் எப்படி தாங்கும்...' என்ற சந்தேகம், ஒவ்வொருவருக்கும் எழும். சரி, தண்ணீர் கொடுக்கலாமா என்ற கேள்விக்கு என்ன பதில்?
''கண்டிப்பாக கொடுக்கக் கூடாது,'' என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் மகேஷ்வரன்.
அவர் கூறியதாவது:
குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகளுக்கு நீர் தேவைப்படாது. தாய்ப்பாலிலேயே குழந்தைக்குத் தேவையான வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள், கொழுப்புகள் இருப்பதால், குழந்தைகள் நல்ல ஊட்டத்துடன் வளர, தாய்ப்பால் மட்டுமே போதுமானது.
6 மாதங்களுக்கு மேல் உணவு கொடுக்கும்போது, சிறிதளவு நீர் கொடுக்கலாம். குழந்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் முன், குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொடுப்பது அவசியம்.
பிறந்த குழந்தை முதல் 5 மாதங்களான குழந்தைகளுக்கு, கண்டிப்பாக தண்ணீர் கொடுக்கக் கூடாது. அதிகரித்து வரும் நீர் மாசுபாடு காரணமாக, சிறுநீரகப் பிரச்னைகளால் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடும்.
தாய்ப்பால் குடிக்கும் அளவு குறைந்துவிடும். உடல் எடை அதிகரிப்பதில் பிரச்னை ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு, பல்வேறு தொற்றுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, மருத்துவர்கள் ஆலோசனையின்றி தண்ணீர் கொடுக்கக் கூடாது.
தொடர் அழுகை, காய்ச்சல், வேர்க்குரு, கொப்பளங்கள், எதுக்களித்தல், வாந்தி எடுத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது அவசியம்.
இவ்வாறு, டாக்டர் மகேஷ்வரன் கூறினார்.

