/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாகுபலி யானை மீது பட்டாசு வீசி துன்புறுத்தல்
/
பாகுபலி யானை மீது பட்டாசு வீசி துன்புறுத்தல்
ADDED : மார் 11, 2025 05:03 AM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் உலா வந்த பாகுபலி யானை அங்குள்ள சாலையோர தர்பூசனி கடையை சூறையாடியது. யானையை விரட்ட அங்குள்ளவர்கள் பட்டாசு வீசி துன்புறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, குரும்பனூர், ஓடந்துறை, பாலப்பட்டி, ஊட்டி சாலை, கோத்தகிரி சாலை என பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி எனப்படும் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. அவ்வப்போது ஊருக்குள் உலா வரும் பாகுபலி யானை, அதன் பின் சில மாதங்களுக்கு வனப்பகுதிக்குள்ளேயே இருந்து விடும்.
இதனிடையே நேற்று அதிகாலை பாகுபலி யானை மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் உலா வந்தது. அப்போது, சாலையோரம் இருந்த தர்பூசனி கடையை சூறையாடி தர்பூசனியை சாப்பிட்டது. இதனால் ஊட்டி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பாகுபலி யானையை விரட்ட சிலர் அதன் மீது பட்டாசுகளை வீசி துன்புறுத்தினர். இந்த சம்பவம் வன ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலையோரம் வனவிலங்குகளை கவரும் வண்ணம் பழக்கடைகளை வைக்கக்கூடாது என அங்குள்ளவர்களிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. யானை உள்ளிட்ட வனவிலங்குகளை பட்டாசு வெடித்து பொதுமக்கள் தாங்களாகவே விரட்ட முயற்சி செய்யக்கூடாது. உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பாகுபலி யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம், என்றார்.--