/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகள் போராட்டத்தால் பத்திர பதிவு தடை நீக்கம்
/
விவசாயிகள் போராட்டத்தால் பத்திர பதிவு தடை நீக்கம்
ADDED : ஆக 29, 2024 07:57 PM
அன்னுார்:விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தால், பத்திரப்பதிவு தடை உத்தரவு கைவிடப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், கடந்த 2021ம் ஆண்டு,' கோவை மாவட்டம், அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், பொகலூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் இலுப்பநத்தம், பெள்ளே பாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளில் 3,850 ஏக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது,' என அறிவித்தது.
இதை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, 2022 டிசம்பரில், 'தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் மட்டுமே தொழில் பூங்கா அமையும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது,' என தமிழக அரசு அறிவித்தது. இதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 27, 28 தேதிகளில் அன்னுார் சார்பதிவாளர் அலுவலகத்தில், குப்பனுார் மற்றும் பொகலுர் ஊராட்சியில் நிலம் பத்திரப்பதிவு செய்ய சென்றவர்களிடம், நிலம் பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, என அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
அதிர்ச்சி அடைந்த 'நமது நிலம், நமதே' அமைப்பினர், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால் மற்றும் விவசாயிகள் நேற்று அன்னுார் அருகே எல்.கோவில்பாளையத்தில் நடந்த 'மக்களுடன் முதல்வர்' முகாமுக்கு சென்றனர்.
நுழைவு வாயிலை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தாசில்தார் குமரி ஆனந்தன், இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் பேச்சு நடத்தினர்.
அப்போது அன்னுார் சார் பதிவாளர் செல்வ பாலமுருகன்,' அன்னுார் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட குப்பனுார் மற்றும் வடக்கலூர் ஊராட்சிகளில் பத்திர பதிவு செய்வதற்கு எந்த தடையும் இல்லை,' என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.