ADDED : ஆக 22, 2024 02:22 AM
அன்னுார்: கோவை மாவட்டம்அன்னுார் அருகே 80 ஏக்கர் பரப்பளவு உள்ள கெம்ப நாயக்கன்பாளையம் குளம் உள்ளது.
இதில் விதிமுறையை மீறி அதிகமாக மண் எடுத்ததாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 16ம் தேதி உதவி பொறியாளர் மற்றும் அதிகாரிகள் குளத்தில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து குளத்தில் மண் எடுக்க தற்காலிகமாக தடை விதித்தனர். இது குறித்து அப்பகுதி சிறு விவசாயிகள் கூறுகையில், 'நாங்கள் விண்ணப்பித்து 15 நாட்கள் கழித்து தற்போது தான் மண் எடுக்க அனுமதி கிடைத்தது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர், தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அனுமதிக்கும் போது மண் எடுக்கலாம்,' என்று கூறி விட்டார்.
நாங்கள் விவசாயத்திற்கு அனுமதி பெற்றும் தற்போது மண் எடுக்க முடியாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் சிறு, குறு விவசாயிகள் அரசு அதிகாரிகள் முன்னிலையில் விதிமுறைக்கு உட்பட்டு மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்,' என்றனர்.