/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருநங்கைகளை விரட்டியடிக்கலாமா?
/
திருநங்கைகளை விரட்டியடிக்கலாமா?
ADDED : ஆக 18, 2024 12:06 AM

கோவையில் ஆணிவேர் படைப்பகம் சார்பில், திருநங்கைகள் குறித்த 'அண்ணகர்கள்' என்ற விழிப்புணர்வு நாடகம், வடகோவை மாருதி தியேட்டரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
கவிஞர் நான்சி கோமகன் ஒருங்கிணைப்பில், இயக்குனர் செல்வின் இயக்கிய இந்த நாடகத்தில், திருநங்கைகள் மற்றும் புதிய நாடக கலைஞர்கள் பலர் நடித்திருந்தனர்.
பள்ளிப்பருவத்தில் சிறுவனாக துள்ளித்திரியும் ஒரு சிறுவன், ஒரு குறிப்பிட்ட வயதில், அவன் ஆணில்லை, பெண் என உணர்கிறான். அந்த பதின்பருவத்தில், ஒரு பையனின் உடலில் ஏற்படும் மாற்றம், உணர்வில் ஏற்படும் மாற்றம் அவனுக்குள் இரண்டுமற்ற நிலையை உணரச்செய்கிறது.
இது குடும்பத்தினருக்கு தெரியும் போது, குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவரும் வெறுக்கின்றனர். குடும்பத்தினர் அந்த சிறுவனை வீட்டை விட்டு துரத்துகின்றனர்.
வீதிக்கு வந்து விட்ட 16 வயது சிறுவனின் எதிர்காலம், என்ன ஆகிறது என்பதைதான் 'அண்ணகர்கள்' நாடகம் சித்தரிக்கிறது.
நாடகம் குறித்து இயக்குனர் செல்வின் பேசுகையில், ''ஆடு, மாடு, நாய், பூனைகளை கூட வீட்டில் வைத்து வளர்க்கும் நாம், மாற்றுத்திறனாளி குழந்தைகள் மீது அன்பு பாசம் காட்டும் நாம், தன் பிள்ளை திருநங்கை என தெரிந்தவுடன், வீட்டை விட்டு துரத்துகின்றனர். இதை தவிர்க்க வேண்டும். குடும்பமும், சமூகமும் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதுதான் இந்த நாடகம்,'' என்றார்.

