/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிரம்பி ததும்பும் பி.ஏ.பி., தொகுப்பு அணைகள் தடையின்றி நீர் கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி
/
நிரம்பி ததும்பும் பி.ஏ.பி., தொகுப்பு அணைகள் தடையின்றி நீர் கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி
நிரம்பி ததும்பும் பி.ஏ.பி., தொகுப்பு அணைகள் தடையின்றி நீர் கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி
நிரம்பி ததும்பும் பி.ஏ.பி., தொகுப்பு அணைகள் தடையின்றி நீர் கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி
ADDED : செப் 07, 2024 03:09 AM

பொள்ளாச்சி, செப். 7-
பருவமழை கை கொடுத்ததால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள், கடந்த, ஒரு மாதத்துக்கு மேலாக நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளான மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், மேல்ஆழியாறு, ஆழியாறு, திருமூர்த்தி அணைகள் உள்ளன. கடந்தாண்டு போதிய பருவமழை கை கொடுக்காததால், அணைகள் நீர்மட்டம் சரிந்து பாசனத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
நிலை பயிர்களை காப்பாற்ற மட்டுமே குறைந்த நாட்களுக்கு நீர் வழங்கப்பட்டது. இதனால், விவசாயிகள், தென்னை மரங்களை காப்பாற்ற விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், பருவமழை எதிர்பார்த்தது போன்று பெய்ய துவங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் பருவமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பின.
* தொடர் மழை காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் போதிய பருவமழை இல்லாததால் வறண்டு காணப்பட்டது. கடந்த ஜூலை மாதம், 19ம் தேதி, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நிரம்பியது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, சோலையாறு அணை இதுவரை நான்கு முறை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக சாரல்மழை பெய்வதால், நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.63 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 699 கனஅடி தண்ணீர் வரத்காக இருந்தது. 821 கனஅடி வீதம் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.
* ஆழியாறு அணை மொத்தம் உள்ள, 120 அடியில் கடந்த, ஜூலை 18ம் தேதி தொடர் நீர் வரத்தால் அணை நீர்மட்டம், 100 அடியாக உயர்ந்தது. அதன்பின், 26ம் தேதி, 120 அடியில், 118.65 அடியாக அணை உயர்ந்ததால், 11 மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது.
கடந்த, 29ம் தேதி, 119.20 அடியாக உயர்ந்ததையடுத்து, மீண்டும் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, ஆழியாறு அணையில், 117.80 அடி நீர்மட்டம் இருந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அணை 115 அடிக்கு குறையாமல் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
* பரம்பிக்குளம் அணைக்கு, சோலையாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து உள்ளது. கடந்த ஜூலை மாதம் அணை நீர்மட்டம், 72 அடியில், 53.88 அடி இருந்தது. கடந்த மாதம், 11ம் தேதி 70 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
நேற்றும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், மூன்று மதகுகள் வழியாக,வினாடிக்கு,1,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டதுடன், கால்வாய் வழியாக வினாடிக்கு, 1,000 கன அடிநீரும் வெளியேற்றப்பட்டது.
பரபிக்குளத்தில், நேற்று காலை நிலவரப்படி, 71.56 அடி நீர்மட்டம் இருந்தது. அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன், அணையை ஆய்வு செய்தார். பராமரிப்பு, கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகள் முழு கொள்ளளவும் நீர் நிரம்பி காட்சியளிக்கின்றன. கடந்த ஒரு மாதமாக நீர் நிரம்பிய நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தாண்டு, தடையின்றி பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.