/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கடை எண்: 1620, 1574 மூடப்படுமா? ராம்நகர் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
மதுக்கடை எண்: 1620, 1574 மூடப்படுமா? ராம்நகர் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மதுக்கடை எண்: 1620, 1574 மூடப்படுமா? ராம்நகர் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மதுக்கடை எண்: 1620, 1574 மூடப்படுமா? ராம்நகர் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 09, 2024 04:20 AM
கோவை காந்திபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இரு மதுக்கடைகளை வேறிடத்துக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் படிப்படியாக அகற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் தி.மு.க., கூறியிருந்தது. ஆட்சிக்கு வந்த பின், முதல்கட்டமாக, 500 மதுக்கடைகள் மட்டும் மூடப்பட்டன.
கோவில்கள், பள்ளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் உள்ள மதுக்கடைகள் எவை எவை என ஆய்வு செய்து பட்டியலிட 'டாஸ்மாக்' அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அக்கடைகளை மூடாமல், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தால் மட்டும் பரிசீலிக்க உயரதிகாரிகள் கூறினர். இதன் காரணமாக, இரண்டாம் கட்டமாக மதுக்கடைகளை மூடும் முடிவை கைவிட்டனர்.
கோவையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் மதுக்கடைகள் அமைந்திருக்கின்றன. காந்திபுரத்தில் காளிங்கராயன் வீதியில் மதுக்கடை எண்கள்: 1620, 1574 என இரு கடைகள் எதிரெதிரே ரோட்டின் மீதே அமைந்திருக்கின்றன.
மதுபானம் வாங்க வருவோர், ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். பலர் மதுபானத்தை ரோட்டில் நின்றே அருந்துகின்றனர். சிலர் மது குடித்து விட்டு ரோட்டிலேயே மயங்கி விழுகின்றனர்.
இவ்வழியாகவே காட்டூர், ராம்நகர் மற்றும் கிராஸ்கட் ரோட்டுக்குச் செல்ல வேண்டும். ரோடு குறுகலாக இருப்பதால், 'பீக்ஹவர்ஸ்' சமயத்தில் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. குடிபோதையில் தகராறு செய்து கொள்பவர்களால், இவ்வழியை கடப்போர் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அருகாமையில் காந்தி புரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் இருக்கிறது; வேலைக்குச் செல்வோர், பெண் பயணிகள் பலரும் இவ்வழியை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இவ்விரு கடைகளையும் வேறு பகுதிக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
ராம்நகர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'காளிங்கராயன் ரோட்டில் உள்ள இரு மதுக்கடைகளால் தினமும் அவஸ்தையை சந்திக்கிறோம். இரவு, 10:00 மணிக்கு பிறகும் திருட்டுத்தனமாக மதுபானம் விற்கின்றனர்; விடிய விடிய விற்பனை நடக்கிறது. 'டாஸ்மாக்' நிர்வாகம், காட்டூர் போலீசாரிடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. இவ்விஷயத்தில், கலெக்டர் கிராந்திகுமார் கூடுதல் கவனம் செலுத்தி, மதுக்கடைகளை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும்' என்றனர்.