/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தந்தையாக இருந்து 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் துவக்கி வைப்பு! கோவை விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
/
தந்தையாக இருந்து 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் துவக்கி வைப்பு! கோவை விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
தந்தையாக இருந்து 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் துவக்கி வைப்பு! கோவை விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
தந்தையாக இருந்து 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் துவக்கி வைப்பு! கோவை விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
ADDED : ஆக 09, 2024 08:54 PM

கோவை:''தந்தையாக இருந்து, 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை துவக்கி வைக்கிறேன்,'' என, கோவையில் நேற்று நடந்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியாக பேசினார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து, கல்லுாரியில் சேர்ந்து உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும், 'தமிழ்ப் புதல்வன்' திட்டம், கோவையில் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. விழாவில், தமிழக அரசின் தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனா வரவேற்றார்.
மனதுக்கு நெருக்கமான திட்டம்
கல்லுாரி மாணவர்களுக்கு 'டெபிட்' கார்டு வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்துகிறோம். சில திட்டங்களே மனதுக்கு நெருக்கமாக இருக்கும்; வரலாற்றில் நமது பெயரை எடுத்துச் சொல்லும். அவ்வகையில், 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்துகிறோம். திராவிட மாடல் என்றாலே சமூக நீதிக்கான அரசு. பெண்கள் பொருளாதார விடுதலை பெறுவதும், இளைஞர்கள் கல்வி உரிமை பெறுவதுமே சமூக நீதிக்கான அடித்தளம்.
பயணமில்லாத பயணம் திட்டத்தில், இதுவரை, 518 கோடி முறை பெண்கள் பயணித்திருக்கின்றனர். 1.15 கோடி பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. 20.73 லட்சம் மாணவர்கள் காலை சிற்றுண்டி திட்டத்தில் பயன்பெறுகின்றனர். 28 லட்சம் மாணவர்களுக்கு, 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சியளித்து, வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
'புதுமைப் பெண்' திட்டத்தில், 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். எங்களுக்கு உதவித்தொகை கிடையாதா என மாணவர்கள் கேட்டனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற, 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் துவக்கப்பட்டு உள்ளது; 43.28 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இதற்காக, 360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
குடும்பத்தில் ஒருவன்
தந்தையாகவும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவும் இருந்து உருவாக்கிய திட்டம், இது. இதன் மூலம் நீங்கள் பெறும் வளர்ச்சியை, அடுத்தடுத்த ஆண்டுகளில் கண்காணிப்பேன். வரும், 2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். இதன் மூலம் வளர்ச்சியடைந்த, வெளிநாடுகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் உயரும்.
அனைத்து குழந்தைகளும் உயர்கல்வி கற்க வேண்டும். பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஒரு மாணவர் கூட உயர் கல்வி கற்காமல் திசை மாறி செல்லக்கூடாது. கல்லுாரி மாணவர்கள் கல்வித்தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு பெற வேண்டும். நம் மாணவர்கள் வாழ்க்கையில் சிறக்க வேண்டுமென்பதே என் கனவு.
வறுமை இல்லாத, சமத்துவம் வாய்ந்த அறிவுசார்ந்த தமிழ்ச் சமுதாயத்தை வருங்காலத்தில் உருவாக்க வேண்டும். மாணவர்கள் கல்வி கற்க எதுவும் தடையாக இருக்கக் கூடாது. தடங்கல் ஏற்பட்டால், உடைத்தெறிந்து வெற்றி பெற வேண்டும். அதற்குரிய உதவி செய்ய நானிருக்கிறேன்.
உடைத்தெறியுங்கள்
ஒலிம்பிக்கில் பங்கேற்ற வினேஷ் போகத், தன்னுடைய வாழ்க்கையில் எத்தகைய தடங்கல்களை எதிர்கொண்டார். பலவீனமாக வீட்டுக்குள் முடங்காமல், தைரியம். தன்னம்பிக்கை, அசாத்திய துணிச்சலுள்ள பெண்ணாக போராடி, நாம் பாராட்டும் அளவுக்கு கொடி கட்டிப் பறக்கிறார். தடைகள் என்பது உடைத்தெறியத்தான்; தடைகளை பார்த்து சோர்ந்து முடங்கக்கூடாது.
வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்; வெற்றி ஒரு நாள் வசப்படும். உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். உங்களுக்குப்பின், உங்களது பெற்றோர்; உங்களது குடும்பம் மட்டுமல்ல; திராவிட மாடல் அரசும் இருக்கும்.
இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
விழாவில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார். கோவை கலெக்டர் கிராந்திகுமார் நினைவு பரிசு வழங்கினார். அமைச்சர்கள் வேலு, பொன்முடி, முத்துசாமி, மகேஷ், கீதாஜீவன் முன்னிலை வகித்தனர். எம்.பி.,க்கள் ராஜ்குமார், ஈஸ்வரசாமி, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.