/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு உத்தரவை மீறி 'போலீஸ் பூத்'களில் விளம்பர பலகை! திருட்டுத்தனமாக கொடுத்த மின் இணைப்புகள் துண்டிப்பு
/
அரசு உத்தரவை மீறி 'போலீஸ் பூத்'களில் விளம்பர பலகை! திருட்டுத்தனமாக கொடுத்த மின் இணைப்புகள் துண்டிப்பு
அரசு உத்தரவை மீறி 'போலீஸ் பூத்'களில் விளம்பர பலகை! திருட்டுத்தனமாக கொடுத்த மின் இணைப்புகள் துண்டிப்பு
அரசு உத்தரவை மீறி 'போலீஸ் பூத்'களில் விளம்பர பலகை! திருட்டுத்தனமாக கொடுத்த மின் இணைப்புகள் துண்டிப்பு
ADDED : ஆக 28, 2024 01:00 AM

கோவை;தமிழக அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவுகளை மீறி, கோவை நகரப்பகுதிகளில் உள்ள 'போலீஸ் பூத்'களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு திருட்டுத்தனமாக கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்புகள், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், துண்டிக்கப்பட்டன.
கோவை நகரப் பகுதியில், போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்காக, சாலை சந்திப்புகள் மற்றும் முக்கியமான இடங்களில், 'போலீஸ் பூத்'கள் அமைக்கப்பட்டுள்ளன.
தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் 'ஸ்பான்சர்' மூலமாகவும் சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் பூத்கள் வைப்பது தவறில்லை; இவற்றை சுற்றிலும் தமிழக அரசின் உத்தரவை மீறி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், தெருவிளக்குகளுக்கு வழங்கியுள்ள மின் இணைப்புகளில் இருந்து திருட்டுத்தனமாக இணைப்பு எடுக்கப்பட்டிருந்தது. இது, அப்பட்டமான விதிமீறல்.
சாலை சந்திப்புகள் மற்றும் சாலைகளுக்கு அருகாமையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் எவ்வித விளம்பர பலகைகளும் வைக்கக் கூடாது என்பது ஐகோர்ட்மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
இதைத்தொடர்ந்து, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது; அரசாணையும் வெளியிட்டிருக்கிறது. விளம்பர பலகைகள் வைக்க வேண்டுமெனில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக அனுமதி பெற வேண்டும்.
இதிலும் கூட, தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி கிடையாது. இவ்விஷயத்தில், விளம்பர பலகைகள் வைப்பதற்கு போலீசாருக்கு எவ்விதத்திலும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், தமிழக அரசின் உத்தரவு மற்றும் அரசாணை எண், விதிகள் உள்ளிட்டவற்றை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், கோவை நகரில் வைக்கப்பட்டுள்ள போலீஸ் பூத்களில், மாநகராட்சி நிர்வாகத்திடம் எவ்வித அனுமதியும் பெறாமல், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. சில பூத்களில் விளம்பரம் செய்ய அணுகவும் என கூறி, தனியார் ஏஜன்சியின் மொபைல் போன் எண் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கு எவ்விதத்தில், எந்தச் சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டது என்கிற கேள்விக்கு, போலீஸ் உயரதிகாரிகளிடம் பதில் இல்லை.
போலீஸ் பூத்களில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது, சட்ட விரோத செயல்களுக்கு போலீசார் உடந்தையாகியிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இச்சூழலில், போலீஸ் பூத்களுக்கு தெருவிளக்கு களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பில் இருந்து திருட்டுத்தனமாக இணைப்பு எடுத்திருந்ததை, மின்வாரிய அதிகாரிகள் கண்டறிந்தனர். இத்தவறு, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், போலீஸ் பூத்களுக்கு வழங்கியுள்ள மின் இணைப்பை ஆய்வு செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
அதில், திருட்டுத்தனமாக மின் இணைப்பு எடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டதும், அவ்விணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அனுமதியின்றி வைத்துள்ள விளம்பர பலகைகள் இன்னும் அகற்றப்படவில்லை.
இதுதொடர்பாக, மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ''போலீஸ் பூத்துக்கு வழங்கியிருந்த 'இல்லீகல்' மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன.
''எந்த அடிப்படையில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டன என தெரியவில்லை.
''விதிமீறல் இருக்கிறதா என, தமிழக அரசின் உத்தரவை படித்துப் பார்க்க வேண்டும். அதன்பின், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.