/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்லுார் அணை துார்வாரும் பணி துவக்கம்
/
பில்லுார் அணை துார்வாரும் பணி துவக்கம்
ADDED : மே 06, 2024 12:18 AM
கோவை:பில்லுார் அணையை துார்வாருவதற்கு முடிவெடுத்துள்ள கோவை மாவட்ட நிர்வாகம், முதல்கட்டமாக, 10 ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண் எடுக்க திட்டமிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக உள்ள பில்லுார் அணை, 1967ல் கட்டப்பட்டது. இதன் மொத்த கொள்ளளவு, 1,568 மில்லியன் கனஅடி. இதன் உயரம், 100 அடி. ஆனால், 45 அடிக்கு வண்டல் மண் படிந்திருக்கிறது.
பருவ மழைக்காலங்களில், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்யும் மழை நீர் அணைக்கு வரும்போது, ஓரிருநாட்களிலேயே நிரம்பி வழியும். அணையின் மதகுகள் திறக்கப்பட்டு, பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.
தற்போது அணையின் நீர் மட்டம் குறைந்திருப்பதால், பருவ மழை துவங்குவதற்கு முன், துார்வார வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)ஸ்வேதா, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றனர்.
அதன்பின், கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:
பில்லுார் அணையை துார்வாரும் குழு, தமிழக அரசால் 2019ல் அமைக்கப்பட்டது. உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தில் துார்வார அனுமதி வழங்கப்பட்டது. முதல்கட்டமாக, திறந்தவெளியில் இயந்திரங்களை கொண்டு, 10 ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, தண்ணீருக்குள் படிந்துள்ள வண்டல் மண்ணில், 25 ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண் அகற்றி, ஆழப்படுத்தப்படும். அணைக்கு நீர் வரத்து துவங்கியதும் பிரத்யேக இயந்திரங்கள் பயன்படுத்தி, வண்டல் மண் எடுக்கப்படும். இவ்விரண்டு பணிகள் முடிந்ததும், அதனால் ஏற்படும் பயன்களை பொறுத்து, உலக வங்கி வல்லுனர்களின் கருத்தை பெற்று, அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். சேகரிக்கப்படும் வண்டல் மண் விவசாயிகளுக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு, அவர் கூறினார்.