/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் குழாயில் வந்த எலும்புகள் குடித்தவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி பொது மக்கள் அதிர்ச்சி
/
குடிநீர் குழாயில் வந்த எலும்புகள் குடித்தவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி பொது மக்கள் அதிர்ச்சி
குடிநீர் குழாயில் வந்த எலும்புகள் குடித்தவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி பொது மக்கள் அதிர்ச்சி
குடிநீர் குழாயில் வந்த எலும்புகள் குடித்தவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி பொது மக்கள் அதிர்ச்சி
ADDED : ஜூன் 17, 2024 10:56 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே சாமப்ப லே-அவுட் பகுதியில் குடிநீர் குழாயில் எலும்புகள், இறைச்சி எச்சங்கள் வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் குடிநீரை பருகிய பலருக்கும் வயிற்று வலி, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 80 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் பவானி ஆற்றிலிருந்து தினசரி சுமார் 14 எம்.எல்.டி., வரை தண்ணீர் எடுத்து, சாமன்னா நீரேற்று நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து, மேல் நிலை குடிநீர் தொட்டிகளில் நிரப்பப்பட்டு, அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையம் நகராட்சி 21 வது வார்டுக்குட்பட்டது சாமப்ப லே-அவுட் 1, 2 பகுதி. இப்பகுதியை சுற்றி இ.பி., காலனி, நாடார் காலனி, மணி நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. சாமப்ப லே அவுட் பகுதியில் கடந்த 2 வாரங்களாக விநியோகிக்கப்பட்ட குடிநீர் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டது. துர்நாற்றம் வீசியது. கடந்த வியாழக்கிழமை இறைச்சி துண்டுகள், முடிகள் போன்றவை குடிநீர் குழாயில் வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின், மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் நேற்று முன் தினம் மெயின் டேங்கில் இருந்து குடிநீர் குழாயை அறுத்து, தண்ணீரை வெளியேற்றி பார்த்தனர். அப்போது அந்த தண்ணீரில் சிறிய எலும்புகள், இறைச்சி துண்டுகள் போன்றவைகள் வந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இந்த தண்ணீரை குடித்த பலருக்கும் வயிற்று வலி, வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. குடிநீரில் இறைச்சியின் எச்சங்கள் இருந்தன. இதனை பார்த்ததும் நாங்கள் கடும் அதிர்ச்சியடைந்தோம். சுகாதாரமற்ற குடிநீரை பருகி உள்ளோம் என நினைக்கையில், மிகவும் மன வேதனை அடைந்தோம். மீண்டும் இது போல் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'நகராட்சியின் வாட்டர் டேங்குகள் முறையாக சுத்தம் செய்து பராமரிக்கப்படுவது கிடையாது. அதற்கு இச்சம்பவமே சாட்சியாக உள்ளது. குடிநீர் விநியோகம், வாட்டர் டேங், குழாய்கள் பராமரிப்பில் நகராட்சி நிர்வாகம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்,' என்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா கூறுகையில், 'குடிநீர் குழாயில் வந்த எலும்புகள், இறைச்சி எச்சங்கள் தொடர்பாக உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.